தூத்துக்குடியில் தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியின் 105-ஆவது நிறுவன நாள் விழா புதன்கிழமை நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற குடியரசு துணைத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன், குத்துவிளக்கேற்றிவைத்து, நிறுவனர்களின் உருவப் படங்களுக்கு மலர் தூவி மரியாதை செய்து பேசியதாவது:
தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியின் 105 ஆண்டுகாலப் பயணம் தொலைநோக்குப் பார்வை, கடின உழைப்பு, நேர்மை மற்றும் வாடிக்கையாளர்களின் நம்பிக்கைக்கு மிகச் சிறந்த எடுத்துக்காட்டாகும். இன்று நாம் ஒரு வங்கியின் நிறுவன நாளை மட்டும் கொண்டாடவில்லை. கடந்த 105 ஆண்டுகளாக மக்களின் மனதில் அந்த வங்கி உருவாக்கியுள்ள அசைக்க முடியாத நம்பிக்கையைக் கொண்டாடுகிறோம்.
1920-ஆம் ஆண்டு தூத்துக்குடியில் நடைபெற்ற நாடார் மகாஜன சங்க மாநாட்டில் வங்கியைத் தொடங்க வேண்டும் என்ற சிந்தனை உருவானது. அதன் தொடர்ச்சியாக 1921-ஆம் ஆண்டு நாடார் வங்கி லிமிடெட் என்ற பெயரில் இந்த வங்கி தொடங்கப்பட்டது. வணிகர்களுக்குத் தேவையான நிதியுதவி வழங்குவதும், மக்களின் சேமிப்புக்குப் பாதுகாப்பு அளிப்பதும் இதன் முக்கிய நோக்கங்களாக இருந்தன.
சிறிய முயற்சியாகத் தொடங்கப்பட்ட இந்த வங்கி இன்று 17 மாநிலங்கள், 4 யூனியன் பிரதேசங்களில் 632 கிளைகளுடன் 53 லட்சத்துக்கும் அதிகமான வாடிக்கையாளர்களுக்குச் சேவை வழங்கி வருகிறது. ரூ.1.30 லட்சம் கோடிக்கும் அதிகமான வணிகத்தைக் கொண்ட நிறுவனமாக வளர்ந்துள்ளது. இந்த வளர்ச்சிக்குப் பங்களித்த முன்னோடிகள், நிர்வாகிகள், பணியாளர்கள், வாடிக்கையாளர்கள் அனைவரும் பாராட்டுக்குரியவர்கள்.
வங்கியின் வளர்ச்சி என்பது கடின உழைப்பாலும், நிர்வாகத் திறனாலும் மட்டுமல்லாமல், மக்களின் நம்பிக்கையாலும் தீர்மானிக்கப்படுகிறது. வங்கிகள் வழங்கும் கடன்கள் மூலம் தொழில்கள் வளர வேண்டும். அந்தத் தொழில்களின் வருவாய் மூலம் வாடிக்கையாளர்கள் கடனைத் திருப்பிச் செலுத்த வேண்டும். அதன் மூலம் வங்கி வைப்புத்தொகையாளர்களுக்கு உரிய வட்டியை வழங்க வேண்டும். இதுபோன்ற ஆரோக்கியமான வளர்ச்சிச் சுழற்சியே வங்கியின் வெற்றிக்கு அடிப்படையாகும்.
கடன் வழங்கும்போது ஒருவரின் சொத்துகளை மட்டும் அடிப்படையாகக் கொள்ளாமல், அவர் தனது தொழிலின் மீது கொண்டுள்ள அர்ப்பணிப்பையும் அக்கறையையும் கவனிக்க வேண்டும். கடன் தொகையை வேறு நோக்கங்களுக்குத் திருப்பிவிடாமல் தொழில் வளர்ச்சிக்குப் பயன்படுத்தும் தொழில்முனைவோர்களை அடையாளம் கண்டு நிதியுதவி வழங்குவதில் வங்கிக் கிளை மேலாளர்களுக்கு முக்கியப் பங்கு உள்ளது.

கடந்த காலங்களில் சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களுக்கு வங்கிகள் அதிக முக்கியத்துவம் அளித்தன. விவசாயிகள், சிறு வியாபாரிகள், தொழில்முனைவோர்களுக்கு வங்கிச் சேவை சென்றடைய வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை. அதே நேரத்தில், பெரிய நிறுவனங்கள் உள்ளிட்ட அனைத்துத் தரப்பினருக்கும் நிதியுதவி வழங்கும் வாய்ப்புகளை வங்கிகள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். சிறு தொழில் நிறுவனங்களுக்கு நிதியுதவி வழங்குவது பெரிய நிறுவனங்களுக்கு நிதியுதவி வழங்குவதற்கு எதிரானது என்ற மனப்பான்மை இருக்கக் கூடாது.
வங்கியின் வளர்ச்சியை அதன் கிளைகளின் எண்ணிக்கை, லாபம் ஆகியவற்றை மட்டும் வைத்து மதிப்பிட முடியாது. ஒரு சாதாரண மனிதனின் வாழ்க்கையில் அந்த வங்கி ஏற்படுத்தியுள்ள மாற்றமே அதன் உண்மையான வெற்றிக்கான அளவுகோலாகும்.
திருவள்ளுவர், 'அருளில்லார்க்கு அவ்வுலகம் இல்லை; பொருளில்லார்க்கு இவ்வுலகம் இல்லை' என்று கூறியுள்ளார். பொருள் ஈட்டுவது அவசியம். ஆனால், அந்தப் பொருளை ஈட்டும்போது இரக்கமும் மனிதநேயமும் இல்லாமல் செயல்படக் கூடாது. தனக்கென வாழ்வது தவறல்ல; தனக்கென மட்டுமே வாழ்வதுதான் தவறு. நமது வளர்ச்சியோடு பிறருடைய வளர்ச்சியையும் இணைத்துக்கொள்ள வேண்டும்.
தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி தனது வளர்ச்சியோடு சமூகத்தின் அனைத்துத் தரப்பினரின் வளர்ச்சியையும் இணைத்துக்கொண்டு செயல்படுவது பாராட்டுக்குரியது. வங்கியின் வளர்ச்சி சராசரி வங்கித் துறை வளர்ச்சியைவிட அதிகமாக உள்ளது. எனவே, அடுத்த 50 ஆண்டுகளில் இந்தியாவின் முதன்மையான தனியார் வங்கியாகத் தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி உருவாக வேண்டும் என்ற இலக்கை நிர்வாகத்தினர் நிர்ணயித்துச் செயல்பட வேண்டும். தெளிவான தொலைநோக்குப் பார்வையும் திட்டமிடலும் இருந்தால் எந்த இலக்கையும் அடைய முடியும்.
எனது பொதுவாழ்க்கைப் பயணமே இதற்கு ஓர் எடுத்துக்காட்டு. 17½ வயதில் பாரதிய ஜனசங்கத்தில் உறுப்பினராக இணைந்தபோது, அந்த இயக்கம் குறித்து அறிந்தவர்கள் மிகக் குறைவு. ஆனால், கொள்கையின் மீது கொண்ட நம்பிக்கையும் தொடர் உழைப்பும் காரணமாக இன்று நாட்டின் இரண்டாவது உயரிய அரசியலமைப்புப் பொறுப்பான துணைக் குடியரசுத் தலைவர் பதவியை அடைந்துள்ளேன்.
எனவே, முயன்றால் முடியாதது எதுவுமில்லை. இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியும் இதேபோன்ற நம்பிக்கையின் அடிப்படையில்தான் முன்னேறி வருகிறது. உலகின் பத்தாவது பெரிய பொருளாதாரமாக இருந்த இந்தியா ஐந்தாவது இடத்துக்கு உயர்ந்து, தற்போது நான்காவது இடத்தை எட்டியுள்ளது. விரைவில் உலகின் மூன்றாவது பெரிய பொருளாதாரமாக உருவெடுக்கும் இலக்கை நோக்கிப் பயணிக்கிறது.
நாடு முழுவதும் சாலை, ரயில், மெட்ரோ உள்ளிட்ட உள்கட்டமைப்பு வசதிகள் விரிவடைந்து வருகின்றன. டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை முறையில் இந்தியா உலக நாடுகளுக்கு முன்னுதாரணமாகத் திகழ்கிறது. சாதாரண காய்கறிக் கடைகளில்கூட யுபிஐ மூலம் பணம் செலுத்தும் அளவுக்கு தொழில்நுட்ப வளர்ச்சி ஏற்பட்டுள்ளது. இந்த மாற்றத்தில் வங்கிகளின் பங்களிப்பு மிகவும் முக்கியமானது.
உலக வங்கியின் குளோபல் ஃபின்டெக்ஸ் 2025 அறிக்கையின்படி, இந்தியாவில் வங்கிக் கணக்கு வைத்திருப்போரின் விகிதம் 89 சதவீதத்தை எட்டியுள்ளது. 2026 மார்ச் 6-ஆம் தேதி நிலவரப்படி, நாட்டின் 99.92 சதவீத கிராமங்கள் ஐந்து கிலோமீட்டர் தொலைவுக்குள் வங்கிச் சேவைகளைப் பெறும் நிலையை எட்டியுள்ளன.

தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி காலத்துக்கேற்ப தன்னை மாற்றிக்கொண்டு தொழில்நுட்ப வளர்ச்சியிலும் முன்னோடியாகத் திகழ்கிறது. 1984-ஆம் ஆண்டிலேயே தூத்துக்குடியில் முழுமையாகக் கணினிமயமாக்கப்பட்ட கிளையைத் தொடங்கியது இதற்குச் சான்றாகும்.
ஒரு நிறுவனம் எவ்வளவு உயரத்துக்குச் சென்றாலும் அதன் வேர்களை மறந்துவிடக் கூடாது. தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி இந்தியாவின் முதன்மையான தனியார் வங்கியாக உருவாக வேண்டும். அதே நேரத்தில், அதன் தலைமையகமும் பெருமைக்குரிய அடையாளமும் என்றென்றும் நமது முத்துநகரான தூத்துக்குடியிலேயே நிலைத்திருக்க வேண்டும். இந்த வங்கியைத் தொடங்கிய முன்னோடிகளுக்கு நாம் செலுத்தும் நன்றிக்கடனாகவும் இதைக் கருத வேண்டும்.
2026 செப்டம்பர் மாத நிலவரப்படி வங்கியின் மொத்த வணிகம் ரூ.1.30 லட்சம் கோடியைக் கடந்துள்ளது. முந்தைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் 27 சதவீதத்துக்கும் அதிகமான வளர்ச்சியைப் பெற்றுள்ளது. ஒரே காலாண்டில் ரூ.450 கோடிக்கும் அதிகமான நிகர லாபம் ஈட்டியிருப்பதும், வராக்கடன்களின் அளவு குறைந்திருப்பதும் பாராட்டுக்குரிய சாதனைகளாகும்.
டிஜிட்டல் தொழில்நுட்பம், செயற்கை நுண்ணறிவு, இணையப் பாதுகாப்பு உள்ளிட்ட துறைகளில் வங்கி பெற்றுள்ள அங்கீகாரங்களும் மகிழ்ச்சியளிக்கின்றன. தொழில்நுட்ப வளர்ச்சியோடு இணையவழி மோசடிகளும் அதிகரித்து வருகின்றன. வாடிக்கையாளர்களின் பணம் மட்டுமல்லாமல், அவர்களது தனிப்பட்ட தகவல்களையும் பாதுகாப்பது வங்கிகளின் முக்கியக் கடமையாகும்.
105 ஆண்டுகால அனுபவம், தலைமுறை தலைமுறையாக வாடிக்கையாளர்கள் அளித்துள்ள நம்பிக்கை, வணிகச் சமூகத்துடன் கொண்டுள்ள உறவு ஆகியவற்றை அடித்தளமாகக் கொண்டு தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி மேலும் உயரங்களைத் தொட வேண்டும்.

2047-ஆம் ஆண்டில் இந்தியா வளர்ச்சியடைந்த நாடாக உருவெடுக்கும் பயணத்தில் தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியின் பங்களிப்பும் மகத்தானதாக இருக்க வேண்டும். வங்கியின் 150-ஆவது ஆண்டு நிறுவன நாளைக் கொண்டாடும் காலத்தில், இந்தியாவின் முதன்மையான தனியார் வங்கிகளில் ஒன்றாக அது திகழ வேண்டும் என்றார்.
விழாவில், தமிழக ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர், தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கித் தலைவர் கே.ராமச்சந்திரன், நிர்வாக இயக்குநரும் தலைமைச் செயல் அதிகாரியுமான சாலி எஸ்.நாயர், நிர்வாக இயக்குநர் வின்சென்ட் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

