தூத்துக்குடி அருகே தனியார் சீஃபுட் நிறுவனத்தில், மின்தடையை சரிசெய்ய முயன்ற எலக்ட்ரீசியன் மின்சாரம் தாக்கி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் செய்துங்கநல்லூர் தென்னஞ்சோலை தெருவைச் சேர்ந்தவர் கன்னையா மகன் அருண் (38), இவருக்குத் திருமணமாகி லதா என்ற மனைவியும், இரண்டு பெண் குழந்தைகளும் உள்ளனர். அருண் நட்டாத்தி அருகே செயல்பட்டு வரும் 'சூப்பர் சீஃபுட்' நிறுவனத்தில் கடந்த 4 ஆண்டுகளாக எலக்ட்ரீசியனாகப் பணியாற்றி வந்தார்.

இந்நிலையில், இன்று காலை அந்த நிறுவனத்தில் திடீரென மின்சாரம் தடைபட்டுள்ளது. மின் இணைப்பைச் சரிசெய்வதற்காக அருண் நிறுவன வளாகத்தில் உள்ள டிரான்ஸ்பார்மர் மீது ஏறியுள்ளார். அப்போது எதிர்பாராத விதமாகக் கடந்து சென்ற உயர் அழுத்த மின்சாரம் தாக்கியதில், அருண் டிரான்ஸ்பார்மரில் இருந்து தூக்கி வீசப்பட்டு கீழே விழுந்தார்.

உடனடியாக நிறுவனத்தில் இருந்தவர்கள் அவரை மீட்டு ஆட்டோ மூலம் பண்டாரவிளை ஆரம்ப சுகாதார நிலையத்திற்குக் கொண்டு சென்றனர். அங்கு அவரைப் பரிசோதித்த அரசு மருத்துவர்கள், அருண் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனர்.

தகவலறிந்து வந்த சாயர்புரம் காவல் நிலைய போலீசார், உடலைக் கைப்பற்றிப் பிரேதப் பரிசோதனைக்காகத் தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.