தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் தாலுகா, அருங்குளம் நடுத்தெருவைச் சேர்ந்தவர் மாரியப்பன் மகன் பாலசுப்பிரமணியன் (64). இவர் அப்பகுதியில் மளிகை கடை நடத்தி வந்துள்ளார். இவரது 3 மகள்களுக்கும் திருமணமாகிவிட்ட நிலையில், இவர் தனது மனைவியுடன் தனியாக வசித்து வந்தார்.

கடந்த சில நாட்களாக உடல்நிலை சரியில்லாமல் இருந்த பாலசுப்பிரமணியன், நேற்று காலை சுமார் 3 மணியளவில் வீட்டை விட்டு வெளியே சென்றுள்ளார். நீண்ட நேரமாகியும் அவர் வீடு திரும்பாததால், உறவினர்களும் அக்கம் பக்கத்தினரும் அவரைப் பல்வேறு இடங்களில் தேடி வந்தனர்.

இந்நிலையில், நேற்று மதியம் ஊர்க் கிணற்றில் அவர் இறந்து கிடந்தது தெரியவந்தது. இது குறித்துத் தகவலறிந்து வந்த தீயணைப்புத் துறையினர், கிணற்றில் இருந்து அவரது உடலை மீட்டுப் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து எப்பாதும்வென்றான் காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.