திருச்செந்தூரில் கழிவுநீர் ஓடையில் தவறி விழுந்து படுகாயமடைந்த திருநெல்வேலியைச் சேர்ந்த முதியவர், தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று அதிகாலை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

திருநெல்வேலி மேலப்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் அஜீஸ் மகன் கரீம்பாதுஷா (60), இவர் கடந்த 6ஆம் தேதி திருச்செந்தூர் அண்ணாமலை ரெசிடென்சி பகுதியில் சென்று கொண்டிருந்தபோது, எதிர்பாராத விதமாகக் குடிபோதையில் அங்கிருந்த கழிவுநீர் ஓடையில் தவறி விழுந்துள்ளார்.

அங்கிருந்தவர்கள் அவரை உடனடியாக மீட்டுத் திருச்செந்தூர் அரசு மருத்துவமனைக்குச் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக அவர் தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி இன்று பரிதாபமாக உயிரிழந்தார். இந்தசம்பவம் குறித்து திருச்செந்தூர் காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.