தூத்துக்குடி மாவட்டம் சேது சுப்பிரமணியபுரம் முருகன் தெருவைச் சேர்ந்தவர் ஈனமுத்து (63). இவர், குரும்பூர் பஜாரில் பூக்கடை வைத்து நடத்தி வந்தார். இவருக்கு ராமலட்சுமி (60) என்ற மனைவியும், இரு மகன்களும், ஒரு மகளும் உள்ளனர்.
இந்நிலையில், நேற்று காலை ஈனமுத்துவுக்குத் திடீரென நெஞ்சு படபடப்பாக இருப்பதாகக் கூறி, தனது டிவிஎஸ் எக்ஸ்எல் இருசக்கர வாகனத்தில் வீட்டிற்குப் புறப்பட்டுச் சென்றுள்ளார். குரும்பூர் - ஏரல் சாலையில் காரைவிளை பாலம் அருகே இருசக்கர வாகனத்தில் திரும்பியபோது, திடீரென நிலைதடுமாறி சாலையோரம் இருந்த வாய்க்கால் தண்ணீருக்குள் விழுந்துள்ளார்.
நீண்ட நேரமாகியும் அவர் வீட்டிற்கு வராததால் சந்தேகமடைந்த உறவினர்கள் அப்பகுதியில் தேடிப் பார்த்தபோது, வாய்க்கால் தண்ணீரில் மூழ்கிக் கிடந்த ஈனமுத்துவை மீட்டனர். அவரை பரிசோதித்தபோது அவர் ஏற்கனவே உயிரிழந்தது தெரியவந்தது.
இச்சம்பவம் குறித்துத் தகவலறிந்த குரும்பூர் காவல் நிலைய போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து உடலைக் கைப்பற்றிப் பிரேதப் பரிசோதனைக்காகத் திருச்செந்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இச்சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

