தூத்துக்குடி மாவட்டம் கயத்தார் தாலுகா, தலையால் நடந்தான் குளம் கிராமத்தைச் சேர்ந்தவர் அண்ணாவி மகன் சுடலை (50), இவர் தற்போது சன்னதுபுதுக்குடி கிராமத்தில் தனது குடும்பத்துடன் வசித்து வந்தார்.

இவர் தினமும் மது அருந்திவிட்டு வீட்டிற்குச் செல்வதுடன், தான் வேலை செய்து சம்பாதிக்கும் பணத்தைக் குடும்பத்தினரிடம் கொடுக்காமல் இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது. இதனால் அவருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

இந்நிலையில், சம்பவத்தன்றும் குடும்பத்தினருடன் மீண்டும் கடுமையான தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் மன உளைச்சலுக்கு ஆளான சுடலை, வீட்டை விட்டு கோபித்துக் கொண்டு வெளியேறியுள்ளார். அதன் பின்னர், சன்னதுபுதுக்குடி கிராமத்தைச் சேர்ந்த கணேசன் என்பவரது தோட்டத்தில் உள்ள மரத்தில், தான் அணிந்திருந்த கைலியால் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.

இது குறித்துத் தகவலறிந்த கயத்தார் காவல் நிலைய போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உடலைக் கைப்பற்றிப் பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இச்சம்பவம் தொடர்பாகப் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.