தூத்துக்குடி மாவட்டம் புதியம்புத்தூர் அருகே உள்ள சில்லாநத்தம் மேற்குத் தெருவைச் சேர்ந்த பெருமாள் மகன் காளியப்பன் (70). இவர் நேற்று புதியம்புத்தூர் – தூத்துக்குடி சாலையில் சில்லாநத்தம் பேருந்து நிறுத்தம் அருகே நடந்து வந்து கொண்டிருந்தார்.
அப்போது, சாமிநத்தம் பவர்பிளாண்டில் வேலை முடித்துவிட்டு, தூத்துக்குடி எட்டையபுரம் ரோடு பகுதியைச் சேர்ந்த சண்முகசாமி மகன் குபேந்திரன் (52) என்பவர் தனது இருசக்கர வாகனத்தில் அவ்வழியாக வந்துள்ளார். எதிர்பாராத விதமாக, சாலையில் நடந்து சென்ற காளியப்பன் மீது பைக் மோதியது.
இந்த விபத்தில் காயமடைந்த காளியப்பன் மற்றும் குபேந்திரன் ஆகிய இருவரையும் அக்கம்பக்கத்தினர் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால், மருத்துவமனைக்குச் செல்லும் வழியிலேயே முதியவர் காளியப்பன் பரிதாபமாக உயிரிழந்தார்.
காயமடைந்த குபேந்திரன் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இச்சம்பவம் குறித்து புதியம்புத்தூர் காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

