குழந்தைகள் தினத்தை முன்னிட்டு தூத்துக்குடியில் மாணவர்களுக்கு வழங்கப்படவுள்ள கேக்குகளின் தரம் மற்றும் பேக்கிங் முறைகள் குறித்து மாவட்ட கண்காணிப்பு அலுவலர் கே.வி. முரளிதரன், மாவட்ட ஆட்சியர் விஷு மகாஜன் முன்னிலையில் ஆய்வு மேற்கொண்டார்.
குழந்தைகள் தினத்தை முன்னிட்டு, தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 1 முதல் 12-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவியர்களுக்கு கேக் வழங்கும் திட்டத்தைத் தமிழ்நாடு முதலமைச்சர் நாளை (நவம்பர் 13) தொடங்கி வைக்கவுள்ளார்.
இத்திட்டத்தைத் தூத்துக்குடி மாவட்டத்தில் சிறப்பாகச் செயல்படுத்துவது குறித்து, தூத்துக்குடி மாநகராட்சி அலுவலகக் கூட்டரங்கில் இன்று (நவம்பர் 12) ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. மாவட்ட கண்காணிப்பு அலுவலரும் வேளாண்மை இயக்குநருமான கே.வி. முரளிதரன், மாவட்ட ஆட்சியர் விஷு மகாஜன் முன்னிலையில் துறை அலுவலர்களுடன் இத்திட்டப் பணிகள் குறித்து விரிவாக ஆய்வு மேற்கொண்டார்.
தொடர்ந்து, தூத்துக்குடி ஜின் பேக்டரி ரோடு மாநகராட்சி நடுநிலைப்பள்ளி மற்றும் சி.வ. அரசு மேல்நிலைப்பள்ளி ஆகிய பள்ளிகளுக்கு நேரில் சென்ற மாவட்ட கண்காணிப்பு அலுவலர் கே.வி. முரளிதரன், மாணவர்களுக்கு வழங்குவதற்காகத் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ள கேக்குகளின் தரம் மற்றும் பேக்கிங் முறைகளைப் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இந்நிகழ்வில் மாவட்ட வருவாய் அலுவலர் மூ. குருச்சந்திரன், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் சங்கீதா சின்னராணி, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக மண்டல மேலாளர் காமாட்சி, மாவட்ட வழங்கல் அலுவலர் சுதா, மாநகராட்சி சுகாதார அலுவலர் மருத்துவர் கணேஷ், தூத்துக்குடி வட்டாட்சியர் திருமணி ஸ்டாலின் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் உடனிருந்தனர்.

