திருச்செந்தூர் கந்தசஷ்டி திருவிழாவின் முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரத்தை முன்னிட்டு பக்தர்களின் வசதிக்காக நாளை (நவ. 14) மற்றும் 15, 16 ஆகிய 3 நாட்களுக்குத் தூத்துக்குடி, நெல்லை, கோவில்பட்டி உள்ளிட்ட பல்வேறு இடங்களிலிருந்து திருச்செந்தூருக்குச் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆண்டுதோறும் பல்வேறு திருவிழாக்கள் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இதில் முக்கிய திருவிழாவான கந்தசஷ்டி திருவிழா நேற்று முன்தினம் யாகசாலை பூஜையுடன் தொடங்கி நடைபெற்று வருகிறது.

விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் வரும் 15-ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற உள்ளது. இதனைத் காணத் தமிழகம் முழுவதிலும் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் திருச்செந்தூரில் திரள்வார்கள் என்பதால், அதற்கான முன்னேற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

இதுகுறித்து தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக நெல்லை நிர்வாக இயக்குநர் செல்வம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: "கந்தசஷ்டி திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் வரும் 15-ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறுகிறது.

சூரசம்ஹாரத்தை முன்னிட்டு நாளை மறுநாள் (14-ந்தேதி) மற்றும் 15, 16-ந்தேதி ஆகிய 3 நாட்கள் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக நெல்லை சார்பாக, தூத்துக்குடி, நெல்லை, கோவில்பட்டி, நாகர்கோவில், உடன்குடி மற்றும் திசையன்விளை ஆகிய பேருந்து நிலையங்களில் இருந்து பக்தர்கள் மற்றும் பொது மக்களின் தேவைக்கேற்ப சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகிறது." இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.