வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுவடைந்துள்ளதை அடுத்து, தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகத்தில் 1-ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. மேலும், பாதுகாப்பு கருதி விசைப்படகு மீனவர்கள் இன்று 2-வது நாளாகக் கடலுக்குச் செல்லவில்லை.

மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்துள்ளது.

இது மேலும் மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக நிலவும். தொடர்ந்து நகர்ந்து இன்று (புதன்கிழமை) இரவு அல்லது நாளை (வியாழக்கிழமை) அதிகாலையில் விசாகப்பட்டினம் மற்றும் கோபால்பூர் இடையே கரையை கடக்கக்கூடும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

இதன் காரணமாகத் தமிழகத்தில் பல்வேறு இடங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் மிதமான மழை பெய்யக்கூடும். தமிழக கடலோரப் பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக் காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்திலும், இடையிடையே 60 கிலோமீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

வங்கக்கடலில் புயல் சின்னம் உருவாகியுள்ளதை அடுத்து, தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகத்திற்கு வரும் கப்பல்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்படும் வகையில் 1-ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

கடலில் பலத்த சூறாவளிக் காற்று வீசக்கூடும் என்பதால் தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த மீனவர்கள் கடலுக்குச் செல்லத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாகத் தூத்துக்குடி மீன்பிடி துறைமுகத்தைச் சேர்ந்த விசைப்படகுகள் இன்று 2-வது நாளாகக் கடலுக்குச் செல்லாமல் துறைமுகத்திலேயே பாதுகாப்பாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.