மக்களவைத் தொகுதி மறுவரையறை மசோதாவுக்குத் திராவிட முன்னேற்றக் கழகம் ஆதரவு அளிக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற எம்.பி.க்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
அனைத்து மாநிலங்களுக்கும் ஒரே சீராக மக்களவைத் தொகுதிகளை 50 சதவீதம் உயர்த்தும் தொகுதி மறுவரையறை மசோதாவுக்குத் திமுக ஆதரவு அளிக்கும் என திமுக எம்.பி. ஆ. ராசா தெரிவித்துள்ளார். இத்திட்டத்தால் தமிழ்நாட்டின் நாடாளுமன்றப் பிரதிநிதித்துவம் 7.18-இலிருந்து 7.21-ஆக உயரும் என்றும், தமிழ்நாட்டிற்கு எவ்வித நஷ்டமும் இல்லை என்றும் அவர் கூறியுள்ளார்.
நாடாளுமன்றத்தில் மகளிருக்கு 33 சதவீத இடஒதுக்கீடு வழங்கவும், அனைத்து மாநிலங்களுக்கும் ஒரே சீராக மக்களவைத் தொகுதிகளின் எண்ணிக்கையை 50 சதவீதம் அதிகரிக்கவும், இந்த நடைமுறையை அடுத்த 25 ஆண்டுகளுக்கு அமல்படுத்தவும் மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதன் மூலம் தற்போது 543-ஆக உள்ள மக்களவைத் தொகுதிகள் 850 வரை (மாநிலங்கள் 815, யூனியன் பிரதேசங்கள் 35) உயர வாய்ப்புள்ளது.
கடந்த ஏப்ரல் மாதம் தாக்கல் செய்யப்பட்ட இம்மசோதா போதிய ஆதரவின்றி வாக்கெடுப்பில் தோல்வியடைந்த நிலையில், அடுத்த மாதம் நடைபெற உள்ள நாடாளுமன்றச் சிறப்புக் கூட்டத்தொடரில் மீண்டும் தாக்கல் செய்யப்பட உள்ளது.
இது குறித்துத் திமுக எம்.பி. ஆ. ராசா தெரிவித்துள்ளதாவது: அனைத்து மாநிலங்களுக்கும் ஒரே விகிதத்தில் மக்களவைத் தொகுதிகளின் எண்ணிக்கையை 50 சதவீதம் உயர்த்தும் தொகுதி மறுவரையறை மசோதாவுக்குத் திமுக ஆதரவு அளிக்கிறது.
நாடாளுமன்றத்தில் தற்போது தமிழ்நாட்டின் பிரதிநிதித்துவம் 7.18 என்ற அளவில் உள்ள நிலையில், புதிய மசோதாவால் அது 7.21-ஆக உயர்கிறது.
தமிழ்நாட்டின் பிரதிநிதித்துவம் குறையக் கூடாது என்பதே திமுகவின் நிலைப்பாடு; எந்த மாநிலத்திற்கும் எம்.பி.க்கள் எண்ணிக்கை குறையாது என்பதாலும், தமிழ்நாட்டிற்கு நஷ்டம் எதுவும் இல்லை என்பதாலும் இம்மசோதாவை ஆதரிக்கிறோம்.
நியாயமான தொகுதி மறுவரையறையை திமுக எப்போதும் ஆதரித்து வந்துள்ளதுடன், மாநில உரிமைகளைப் பாதுகாப்பதில் முன்னணியில் உள்ளது.

