தமிழகத்தில் கடந்த சில நாட்களாக நிலவி வரும் தொடர் மின்வெட்டு மற்றும் பொதுமக்கள் போராட்டங்களைத் தொடர்ந்து, சென்னை அண்ணா சாலையில் அமைந்துள்ள மின்வாரிய தலைமை அலுவலகத்திற்கு முதலமைச்சர் விஜய் நேரில் சென்று திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கடந்த சில நாட்களாகவே தொடர் மின்வெட்டுப் பிரச்சனை நிலவி வருகிறது. இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் ஆங்காங்கே வீதிகளில் இறங்கிப் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், நாள்தோறும் மின்வாரியத்திற்கு வரும் புகார்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.
இப்பிரச்சனை குறித்து அமைச்சர் நிர்மல் குமார் உள்ளிட்ட துறை சார்ந்த அதிகாரிகள் பல்வேறு விளக்கங்களை அளித்து வந்த போதிலும், மின் விநியோகம் முழுமையாகச் சீரடையவில்லை. இந்நிலையில், முதலமைச்சர் விஜய் இன்று காலை திடீரென சென்னை அண்ணா சாலையில் உள்ள மின் வாரிய தலைமை அலுவலகத்திற்குச் சென்று நேரடி ஆய்வில் ஈடுபட்டார்.
அப்போது தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம், மின் தொடரமைப்பு இயக்கம் ஆகியவற்றின் செயல்பாடுகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். மேலும், பொதுமக்கள் அளிக்கும் புகார்களைக் கையாளும் மின் நுகர்வோர் குறை தீர்க்கும் மையமான 'மின்னகம்' சேவை மையத்திற்கும் சென்று அங்குப் புகார்கள் பதிவு செய்யப்படும் முறைகளைப் பார்வையிட்டார்.
ஆய்வின் போது, தமிழ்நாட்டின் தற்போதைய தினசரி மின் தேவை, மின் உற்பத்தி அளவுகள், மின் விநியோகத்தில் நிலவும் தொழில்நுட்பச் சிக்கல்கள் மற்றும் அதனைச் சீரமைக்க எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்து உயர் அதிகாரிகளுடன் முதலமைச்சர் ஆலோசனை நடத்தினார். பொதுமக்கள் பாதிப்படையாத வகையில் மின் விநியோகத்தைச் சீராகப் பராமரிக்கத் தேவையான நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ளுமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

