திருப்பதி ஏழுமலையான் கோயில் வரலாற்றில் தனி பக்தர் ஒருவர் வழங்கிய மிகப்பெரிய காணிக்கையாக, ரூ.200 கோடியே 6 லட்சம் மதிப்பிலான 121 கிலோ தங்க ஆபரணங்களைச் சென்னையைச் சேர்ந்த வெளிநாடு வாழ் இந்தியரான வர்த்தமான் ஜெயின் இன்று (வியாழக்கிழமை, நவம்பர் 26) வழங்கினார்.

திருப்பதி ஏழுமலையானுக்கு அரசர் காலம் முதல் தற்போது வரை ஏராளமான பக்தர்கள் தங்கம், வைரம், வைடூரியம் உள்ளிட்ட விலைமதிப்பற்ற ஆபரணங்களைக் காணிக்கையாக வழங்கி வருகின்றனர். இதுவரை தேவஸ்தானத்திடம் சுமார் ரூ.10 ஆயிரம் கோடி மதிப்பிலான 650 டன் ஆபரணங்கள் உள்ளன.

ஏழுமலையானுக்கு ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் அபிஷேகம் முடிந்த பின்னர், சுமார் 120 கிலோ எடையுள்ள ஆபரணங்களால் அலங்காரம் செய்யப்படுவது வழக்கம். இதற்காகச் சுவாமிக்கு ஏற்கெனவே 3 'செட்' ஆபரணங்கள் உள்ள நிலையில், 4-வது 'செட்' ஆபரணங்களைச் சிரசு முதல் பாதம் வரை முழுமையாகத் தயாரித்து வழங்க உள்ளதாக வரா ஃபியூச்சர் எல்.எல்.பி. (Vara Future LLP) நிறுவனத்தின் தலைவர் வர்த்தமான் ஜெயின் கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு அறிவித்திருந்தார். இதற்காக அர்ச்சகர்கள் மூலம் மூலவருக்கு அளவுகள் எடுக்கப்பட்டு ஆபரணங்கள் தயாரிக்கப்பட்டன.

இந்நிலையில், 121 கிலோ எடையில் தயாரிக்கப்பட்ட தங்க ஆபரணங்கள் இன்று காலை பலத்த பாதுகாப்புடன் கன்டெய்னர் லாரி மூலம் திருமலைக்குக் கொண்டு வரப்பட்டன. தொடர்ந்து, கோயிலில் உள்ள ரங்கநாயக மண்டபத்தில் பக்தர்களின் பார்வைக்காக அவை வைக்கப்பட்டன.

அதனைத் தொடர்ந்து, ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு தம்பதியினர், நன்கொடையாளர் வர்த்தமான் ஜெயின் குடும்பத்தினர், தேவஸ்தான நிர்வாக அதிகாரி ரவிசந்திரா, கூடுதல் நிர்வாக அதிகாரி வெங்கைய்ய சவுத்ரி மற்றும் உயர் அதிகாரிகள் அந்த ஆபரணங்களை ஊர்வலமாகக் கோயிலுக்குள் கொண்டு சென்று சிறப்புப் பூஜைகள் நடத்தித் தேவஸ்தானத்திடம் ஒப்படைத்தனர்.

காணிக்கையாக வழங்கப்பட்ட 47 ரக ஆபரணங்கள்:

சுமார் 8.5 அடி உயரம் கொண்ட மூலவருக்குப் பொருந்தும் வகையில், மொத்தம் ரூ.200 கோடியே 6 லட்சம் மதிப்பிலான 47 வகையான தங்க ஆபரணங்கள் வழங்கப்பட்டுள்ளன. அவற்றில் முக்கியமானவை:

தங்கக் கிரீடம், கர்ண பத்திரங்கள் மற்றும் திருநாமம்

சகஸ்ர 1008 தங்கக் காசு மாலை மற்றும் அஷ்டோத்திர காசு மாலை

சதுர்புஜ லட்சுமி ஹாரம், சந்திர ஹாரம், லட்சுமி ஹாரம் மற்றும் கண்ட ஹாரம்

சங்கு, சக்கரம், தங்கப் பூணூல் மற்றும் மகாலட்சுமி பதக்கம்

நாகாபரணம், புஜ கீர்த்திகள், வைகுண்ட ஹஸ்தம் மற்றும் கடி ஹஸ்தம்

கங்கணங்கள், சூரிய கட்டாரி, கமர பட்டை, தங்கத் திருப்பாதங்கள் மற்றும் பத்ம பீடம்

தனி பக்தர் ஒருவர் வழங்கிய காணிக்கைகளில் இதுவே திருப்பதி தேவஸ்தான வரலாற்றில் முதன்மையானது எனக் கூறப்படுகிறது. வர்த்தமான் ஜெயின் ஏற்கெனவே 2025-ஆம் ஆண்டு ஜனவரி 19-ஆம் தேதி ரூ.6 கோடி நன்கொடையும், கடந்த ஆண்டு மே 16-ஆம் தேதி பக்தர்களுக்கான இலவச மின்சாரப் பேருந்துகளையும் தேவஸ்தானத்திற்கு வழங்கியுள்ளார். தமது நிறுவனத்தின் லாபத்தில் ஒரு பங்கை ஏழுமலையானுக்குக் காணிக்கையாக வழங்குவதில் மிகுந்த மகிழ்ச்சி அடைவதாக வர்த்தமான் ஜெயின் தெரிவித்துள்ளார்.