விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் 'TN.07 CM-2031' என்ற பதிவு எண் கொண்ட காரைப் பயன்படுத்தியது தொடர்பாகச் சமூக வலைதளங்களில் சர்ச்சை எழுந்த நிலையில், அது சினிமா படப்பிடிப்பிற்காக வாடகைக்கு எடுக்கப்பட்ட கார் என அக்கட்சி சார்பில் அதிகாரப்பூர்வ விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன், 'TN.07 CM-2031' என்ற பதிவு எண் கொண்ட கூரை திறக்கப்பட்ட ஆடம்பர காரில் 'கோட் - சூட்' அணிந்து வித்தியாசமான தோற்றத்தில் செல்வது போன்ற புகைப்படம் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலானது. 2031-இல் தமிழகத்தின் முதலமைச்சர் (CM) திருமாவளவன் என்பதைக் குறிக்கும் வகையில் அந்த வாகன எண் அமைக்கப்பட்டுள்ளதாக அரசியல் களத்தில் விவாதங்களும் அவதூறுகளும் எழுந்தன.
இச் சர்ச்சை குறித்து விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பொருளாளர் எஸ்.எஸ். பாலாஜி வெளியிட்டுள்ள விளக்க அறிக்கையில் கூறியிருப்பதாவது: "தனியார் நிறுவனம் ஒன்று 'திருமா 35 - சமூக நீதியின் சகாப்தம்' என்ற தலைப்பில் நிகழ்ச்சி ஒன்றை நடத்தியது. சென்னை பூந்தமல்லியில் உள்ள ஈ.வி.பி. ஃபிலிம் சிட்டியில் நடைபெற்ற இப் படப்பிடிப்பின் போது, கூரை திறக்கப்பட்ட வாகனத்தில் திருமாவளவன் வந்தபோது எடுக்கப்பட்ட படமே அதுவாகும்.
படப்பிடிப்பில் பயன்படுத்தப்பட்ட அந்த விலை உயர்ந்த கார், சினிமா படப்பிடிப்புகளுக்காக வாடகைக்கு விடப்படுவதாகும். படப்பிடிப்பில் பயன்படுத்தப்பட்ட காரின் ரகம் மற்றும் அதிலிருந்த எண் பலகை (Number Plate) குறித்து திருமாவளவனுக்கு எதுவும் தெரியாது. நிகழ்ச்சி ஏற்பாட்டுக் குழுவினரே அதனை இறுதி செய்தனர்.
"வருங்காலத்தில் 'ஆளும் கட்சியாக வி.சி.க.' உருவெடுக்கும் என்ற எதிர்கால திசைப்புள்ளியை வெளிப்படுத்தும் வகையில், படப்பிடிப்புத் குழுவினர் 'TN.07 CM-2031' என அந்த வாகன எண்ணை வடிவமைத்திருந்தனர்.
படப்பிடிப்புத் தளத்தில் எடுக்கப்பட்ட அந்தப் புகைப்படத்தை வைத்துக்கொண்டு, சிலர் நெஞ்சில் வன்மத்தை வைத்து மலிவான அரசியல் மனநிலையோடு காழ்ப்புணர்ச்சியை உமிழ்ந்து வருகின்றனர். திருமாவளவன் 'CM' எனக் குறிப்பிடப்பட்ட காரில் வருவதையே சகித்துக் கொள்ள முடியாமல் வழக்கம் போல் அவதூறுகளைப் பரப்புகின்றனர்.
இன்றைய அரசியல் சூழலை விட, நாளைய தமிழகத்தின் அரசியல் திசைவழியை மக்களே தீர்மானிப்பார்கள். காலத்தின் தீர்ப்பை பெருமகிழ்ச்சியோடு வரவேற்றுச் சிறுத்தைகள் காத்திருப்போமே தவிர, எரிச்சலோடு வெறுப்பு அரசியலில் வெந்து போக மாட்டோம். எனவே, சமூக நீதியின் மீது அக்கறை கொண்ட அனைவரும் இத்தகைய கொடிய சிந்தனையாளர்களைக் கண்டிக்க வேண்டும்" என அவர் தெரிவித்துள்ளார்.

