இந்திய ரயில்வே சார்பில் நாடு முழுவதும் உள்ள முக்கிய ரயில் நிலையங்களை மேம்படுத்தும் நோக்கில் 'அம்ரித் பாரத்' திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத் திட்டத்தின் கீழ் ஆன்மீகத் தலமான திருச்செந்தூர் ரயில் நிலையத்தில் பயணிகள் வசதிகளை மேம்படுத்தும் வகையிலும், நவீன உள்கட்டமைப்புகளை உருவாக்கும் வகையிலும் ரூ. 17.5 கோடி நிதி ஒதுக்கீட்டில் பல்வேறு வளர்ச்சிப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
திருச்செந்தூர் ரயில் நிலையத்தில் நடைபெற்று வரும் கட்டுமானப் பணிகள், பயணிகள் அமரும் இடங்கள், நடைமேடைகள் புதுப்பித்தல் மற்றும் நவீன மயமாக்கல் பணிகளைத் தெற்கு ரயில்வே கோட்ட மேலாளர் ஓம் பிரகாஷ் மீனா நேற்று (செவ்வாய்க்கிழமை) நேரில் சென்று ஆய்வு செய்தார்.
பணிகளின் முன்னேற்றம் குறித்துக் கேட்டறிந்த அவர், பணிகளைத் தரமாகவும் விரைவாகவும் முடித்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வருமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். ஆய்வின் போது மூத்த கோட்டப் பொறியாளர் பிரவீனா, வணிக உதவி மேலாளர் மணிவண்ணன், வணிக ஆய்வாளர் அரவிந்த் உள்ளிட்ட ரயில்வே உயரதிகாரிகள் உடன் இருந்தனர்.

