திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயில் வளாகத்தில் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் ரூ.5.10 கோடி மதிப்பீட்டில் புதியதாக கட்டப்பட்டுள்ள கருங்கல் யாகசாலை மண்டபம், கைப்பேசி பாதுகாப்பு மையம், 3 சுகாதார வளாகத்திற்கான கட்டடங்களை குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் பெ.மதன் ராஜா , மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை அமைச்சர் ஆ.ஸ்ரீநாத் ஆகியோர் இன்று (10.10.2026), திறந்து வைத்து பார்வையிட்டனர்.

பின்னர் அமைச்சர்கள் தெரிவிக்கையில் "திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணியசாமி திருக்கோயிலானது முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படைத்தலமாக உலக பிரசித்திப்பெற்ற ஸ்தலமாக விளங்குகிறது. பக்தர்களின் அடிப்படை வசதிகளை மேம்படுத்தும் வகையில் திருக்கோவில் வளாகத்தில் பல்வேறு கட்டுமானப் பணிகள் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

அதன் அடிப்படையில் இன்றைய தினம் இத்திருக்கோயிலுக்கு வருகை தரும் பக்தர்களின் அடிப்படை வசதிகளை நிறைவேற்றிடும் பொருட்டு புதியதாக கட்டப்பட்டுள்ள கட்டுமான பணிகளான ரூ.1 கோடி மதிப்பீட்டில் ராஜ கோபுரத்திற்கு அருகில் கருங்கல்லால் ஆன யாகசாலை மண்டபம், ரூ.24 லட்சம் மதிப்பீட்டில் சுகாதார வளாகம் ஒன்றை அனுகிரக விலாசம், திருக்கோயிலின் வடக்கு நுழைவாயில் ரூ.98 இலட்சம் மதிப்பீட்டில் சுகாதார வளாகம், ரூ.1.74 கோடி மதிப்பீட்டில் திருக்கோயில் அன்னதானக் கூடத்திற்குப் பின்புறம் சுகாதார வளாகம், இடும்பன் கோவில் அருகில் ரூ.1.14 கோடி மதிப்பீட்டில் பொருட்கள் பாதுகாப்பு அறை மற்றும் கைபேசி பாதுகாப்பு மையம் ஆகிய ஐந்து கட்டடங்களும் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைக்கப்பட்டுள்ளது என தெரிவித்தனர்.

இவ்விழாவில், மாவட்ட வருவாய் அலுவலர் மூ.குருச்சந்திரன், திருக்கோயில் அறங்காவலர் குழுத் தலைவர் இரா.அருள்முருகன் மற்றும் அறங்காவலர்கள் திருமதி வனிதா, செல்வராஜ், திருக்கோயில் இணை ஆணையர் / செயல் அலுவலர் அருணாசலம் தூத்துக்குடி, திருக்கோயில் துணை ஆணையர் யக்ஞ நாராயணன், திருச்செந்தூர் வருவாய்க் கோட்டாட்சியர் கௌதம், திருக்கோயில் உதவி ஆணையர் சி.லோகநாதன், திருச்செந்தூர் நகராட்சி ஆணையர் ஈழவேந்தன், கண்காணிப்பாளர்கள், திருக்கோயில் பணியாளர்கள், பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் கலந்து கொண்டனர்.