கன்னியாகுமரி மாவட்டம் திங்கள்நகர் பகுதியில் நடைபெற்ற இளைஞர் கொலை வழக்கில் தலைமறைவாக இருந்த ஒருவரை போலீசார் அதிரடியாகக் கைது செய்து, வழக்கில் தொடர்புடைய மூவரையும் சிறையில் அடைத்துள்ளனர்.
வெளிநாட்டில் பணிபுரிந்து வந்த காட்டுவிளை பகுதியைச் சேர்ந்த சமீம் (26), கடந்த நவம்பர் 15-ஆம் தேதி ஊருக்கு வந்துள்ளார். 2019-ஆம் ஆண்டு முதல் பைக் எரித்த விவகாரம் தொடர்பாக இருந்து வந்த முன்விரோதம் காரணமாக, கடந்த நவம்பர் 26-ஆம் தேதி இரவு குளச்சல் ஊற்றுக்குழியைச் சேர்ந்த குமார் மகன் அகில், திங்கள்நகர் காட்டுவிளையைச் சேர்ந்த கதிரேசன் மகன் முகேஷ் மற்றும் கல்லுகூட்டம் நெடுந்தரவிளையைச் சேர்ந்த மூர்த்தி மகன் முகேஷ் ஆகிய மூவரும் திட்டமிட்டு சமீமின் வீட்டிற்குச் சென்று மிரட்டல் விடுத்துள்ளனர்.
தொடர்ந்து, கதிரேசன் மகன் முகேஷ் கூர்மையான ஆயுதத்தால் சரமாரியாகத் தாக்கியதில் படுகாயமடைந்த சமீம் பரிதாபமாக உயிரிழந்தார்.
இது குறித்துச் சமீமின் தாய் ஹயர் நிஷா பீவி அளித்த புகாரின் பேரில் இரணியல் காவல் நிலைய போலீசார் கொலை வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இதனிடையே, மற்ற இருவரும் நீதிமன்றத்தில் சரணடைந்த நிலையில், தலைமறைவாக இருந்த அகிலை மார்த்தாண்டம் பகுதியில் வைத்து போலீசார் கைது செய்தனர்.
தற்போது மூவரும் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இவ்வழக்கில் விரைந்து நடவடிக்கை எடுத்துக் குற்றவாளிகளைச் சிறையில் அடைத்த குமரி மாவட்ட காவல்துறையினருக்குச் சமீமின் உறவினர்கள் நன்றி தெரிவித்துள்ளனர்.

