திமுகவைப் பழிவாங்கும் நோக்கில் முன்னாள் அமைச்சர்கள் மீது திரும்பத் திரும்பப் பொய் வழக்குகள் பதிவு செய்து, வீடுகளில் சோதனை நடத்தி அச்சுறுத்தப் பார்க்கிறார்கள் என திமுக மகளிர் அணிச் செயலாளர் கனிமொழி எம்.பி. குற்றம் சாட்டியுள்ளார்.
மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்த கனிமொழி எம்.பி. பேசியதாவது: "திமுகவைப் பழிவாங்கக் கூடிய வகையில், எல்லா முன்னாள் அமைச்சர்கள் மீதும் வழக்குகள் போட்டு, அவர்கள் வீடுகளில் சோதனை என்ற பெயரில் திரும்பத் திரும்பப் பொய் வழக்குகள் பதிவு செய்து வருகிறார்கள். இதன் மூலம் அவர்களை அச்சுறுத்தி விடலாம், விமர்சிக்காமல் நிறுத்தி விடலாம் என்ற நினைப்பில் இதையே தொடர்ந்து செய்து கொண்டிருக்கிறார்கள்.
திமுக எத்தனையோ பல சோதனைகளைக் கடந்து வந்த இயக்கம். இதில் இருக்கக் கூடிய யாரும் பயப்படக் கூடியவர்கள் அல்ல. எத்தனை பொய் வழக்குகள் போட்டாலும், எல்லா வழக்குகளிலும் வெற்றி பெற்றுத் தாண்டி நிற்போம்" எனக் கூறினார்.

