இது தொடர்பாக அப்பகுதியைச் சேர்ந்த த. ராஜூ கிழக்கு காவல் நிலைய ஆய்வாளருக்கு அனுப்பியுள்ள மனுவில், "கோவில்பட்டி காமராஜர் தெரு மிகக் குறுகலான பாதையைக் கொண்டதாகும். தெருவில் குடியிருக்கும் சிலர் தங்களது இருசக்கர வாகனங்கள் மற்றும் கார்களைத் தெருவின் இரு பக்கங்களிலும் எதிரெதிரே நிறுத்தி வைக்கின்றனர்.
இதனால், பிற வாகனங்கள் செல்ல முடியாதவாறு கடும் போக்குவரத்து இடையூறு ஏற்பட்டு வருகிறது. அவசரத் தேவைகளுக்குக் கூட வாகனங்களில் செல்ல முடியாத நிலை உள்ளது. இடையூறாக வாகனங்களை நிறுத்திவிட்டுச் செல்பவர்களைத் தேடிக் கண்டுபிடித்து, அவர்கள் வந்து வாகனங்களை எடுப்பதற்குப் பல மணி நேரமாகிறது.
மேலும், இத் தெருவானது 'கம்மாவார் மேல்நிலைப் பள்ளி' மற்றும் 'வ.உ.சி. மேல்நிலைப் பள்ளி' மாணவ - மாணவிகள் தினசரி நடந்து செல்லும் முக்கியப் பாதையாக உள்ளது. குறுகிய தெருவில் வாகனங்கள் கண்டபடி நிறுத்தப்படுவதால், பள்ளி மாணவர்களுக்கு விபத்துகள் ஏற்பட அதிக வாய்ப்புள்ளது.
எனவே, பொதுமக்களுக்கும் பள்ளி மாணவர்களுக்கும் அச்சுறுத்தலாகவும் இடையூறாகவும் இருக்கும் வகையில் காமராஜர் தெருவில் நிரந்தரமாக வாகனங்களை நிறுத்துவதைத் தடுக்கத் தகுந்த நடவடிக்கை எடுக்குமாறு பொதுமக்கள் சார்பில் கோரிக்கை விடுத்துள்ளார்.

