மதுராந்தகம் தொகுதி அதிமுக வேட்பாளர் கணிதா சம்பத்தை ஆதரித்து அச்சிறுப்பாக்கப் பகுதியில் நடைபெற்ற பிரம்மாண்ட பிரச்சாரக் கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது: "கடந்த 2026 தேர்தலில் அதிமுக சார்பில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.எல்.ஏ, தனக்கு வாக்களித்த மக்களையும் உழைத்த நிர்வாகிகளையும் மறந்து, பதவி ஆசையினால் ராஜினாமா செய்துவிட்டு தவெக சார்பில் மீண்டும் போட்டியிடுகிறார்.

இது வாக்களித்த மக்களுக்குச் செய்த துரோகம் மற்றும் ஜனநாயகப் படுகொலை. இத்தகைய நபர்களுக்கு மக்கள் இந்த இடைத்தேர்தலில் தக்க பாடம் புகட்ட வேண்டும்.

தவெக தலைவரின் முகத்தைப் பார்த்தே வாக்கு விழுந்துவிடும் என்று கூறுகிறார்கள். அப்படியென்றால், அவர் ஏன் தெருத்தெருவாகவும் வீடு வீடாகவும் சென்று வாக்குச் சேகரிக்க வேண்டும்? வெறும் ரீல்ஸ் மற்றும் விளம்பரங்களை வைத்துக்கொண்டு ஆட்சியைப் பிடித்துள்ளார்கள். விவசாயி என்று காட்டிக்கொள்ளத் டிராக்டர் ஓட்டுவதும், டீக்கடையில் டீ குடிப்பது போல் நடிப்பதும் மக்களை ஏமாற்றும் நாடகம்."

"திமுக கூட்டணியில் இருந்து கொண்டு தவெக தலைவரை 'கல்லாப்பெட்டி கூட்டணி' என்று விமர்சித்த விடுதலைச் சிறுத்தைகள், கம்யூனிஸ்ட், காங்கிரஸ் மற்றும் ஐ.யு.எம்.எல் போன்ற கட்சிகள், இப்போது அதே தவெகவுடன் கூட்டணி அமைத்துள்ளன. இது எந்த வகையான கொள்கை? அதிமுகவைப் பொறுத்தவரை கூட்டணி வேறு, கொள்கை வேறு. கொள்கை என்பது என்றும் நிரந்தரமானது.

மேலும், தவெக அரசுக்கு ஆதரவளித்த கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் சண்முகமே, 'தவெகவினர் பணத்தைக் கொடுத்து மக்களை ஏமாற்றப் பார்க்கிறார்கள்' எனக் குற்றம் சாட்டியுள்ளார். அங்கம் வகிக்கும் கூட்டணிக் கட்சிகளே விமர்சிக்கும் அளவுக்கு இவர்களது ஆட்சியின் லட்சணம் உள்ளது."

விலைவாசி உயர்வு & சட்டம் - ஒழுங்கு சீர்கேடு:

"தவெக ஆட்சிப் பொறுப்பேற்ற இந்த 5 மாத காலத்தில் அரிசி, சர்க்கரை, மளிகைப் பொருட்களின் விலை 40 சதவீதம் வரை உயர்ந்துள்ளது. மின் கட்டணத்தைக் குறைப்பதாகக் கூறிவிட்டு, தற்போது பல மடங்கு உயர்த்தியுள்ளனர்.

அரசு அலுவலகங்களில் லஞ்சம் தலைவிரித்தாடுகிறது. 32 நகராட்சி, மாநகராட்சி அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை நடத்திய சோதனையிலேயே ரூ.1.73 கோடி கணக்கில் வராத பணம் கைப்பற்றப்பட்டுள்ளது.

அதேபோல், தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு முற்றிலும் சீர்குலைந்துள்ளது. முதல்வர் விஜய் கையில் காவல்துறை இருந்தும், கடந்த 5 மாதங்களில் 300 கொலைகளும், 250 பாலியல் குற்றங்களும் நடந்துள்ளன. இதனைத் தடுக்க இந்த அரசு தவறிவிட்டது.

தவெக அரசின் நாற்காலியில் 3 கால்கள் மட்டுமே அவர்களுக்குச் சொந்தம். மீதமுள்ள ஒரு கால் கூட்டணிக் கட்சிகளிடம் உள்ளது. அவர்கள் சற்று நகர்ந்தாலும் நாற்காலி கவிழ்ந்து, ஆட்சி தானாகவே கலைந்துவிடும். நாம் எதுவுமே செய்ய வேண்டியதில்லை" என்று எடப்பாடி பழனிசாமி தனது பேச்சில் குறிப்பிட்டார்.