தாராபுரம் தொகுதி இடைத்தேர்தல் பிரச்சாரத்தில் தவெக வேட்பாளர் சத்தியபாமாவை உருவக் கேலி செய்து பேசியதாக முன்னாள் முதலமைச்சர் ஸ்டாலினுக்கு, தமிழக முதலமைச்சர் விஜய் தனது அறிக்கையின் வாயிலாகக் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

தாராபுரம் தொகுதி இடைத்தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பேசிய ஸ்டாலின், "சத்தியத்திற்குத் துரோகம் செய்த தவெக வேட்பாளர் சத்தியபாமாவைப் 'பெட்டி பாமா', 'பல்டி பாமா' என அழைக்கின்றனர். எப்படித்தான் அந்த உருவத்தை வைத்துப் பல்டி அடித்தாரோ என்றுதான் தெரியவில்லை" எனப் பேசியதாகக் கூறப்படுகிறது.

இதற்குத் தமிழக வெற்றிக் கழகத்தினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். மேலும், உருவக் கேலி செய்து பேசிய ஸ்டாலின் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க வலியுறுத்தித் தேர்தல் ஆணையத்தில் தவெக சார்பில் அதிகாரப்பூர்வமாகப் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

இச்சம்பவம் குறித்துத் தமிழக முதலமைச்சர் விஜய் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: "தாராபுரம் தொகுதி இடைத்தேர்தல் பிரச்சாரப் பொதுக்கூட்டம் என்ற பெயரில், தீய சக்தியான திமுக சார்பில் ஓர் அவதூறு மற்றும் அநாகரிகக் கூட்டத்தை ஸ்டாலின் நடத்தியுள்ளார். தாராபுரம் தொகுதி தவெக வேட்பாளரான சகோதரி சத்தியபாமா குறித்து, உருவக் கேலி செய்து மிகவும் அநாகரிகமாகப் பேசிப் புளகாங்கிதம் அடைந்துள்ளார்.

திமுக சார்பாக வளர்க்கப்பட்டு வரும் ஆபாச நதியை, வன்ம நதியை, வக்கிர நதியை உருவாக்கியதே முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் ஆகிய தான்தான் என்பதைப் பெருமையுடன் மார்தட்டி மகிழ்வுடன் ஒப்புக்கொண்டிருக்கிறார். ஜனநாயகத்திற்கு விரோதமானவர்கள் திமுகவினர். ஆபாசமும் வன்மமும் வக்கிரமும் திமுகவின் மூலக்கூறிலும் மூளைக்கூறிலும் கலந்திருப்பதைத் தமிழக மக்கள் அனைவரும் காலகாலமாக உணர்ந்தே வைத்திருக்கின்றனர்.

பெண்களைப் பற்றி ஆபாசமாகப் பேசுவதில், அதிலும் பெண்களை அருகில் வைத்துக்கொண்டே அவர்கள் அருவருப்பாக உணர்வதைக்கூட கண்டுகொள்ளாமல் பேசுவதில் வல்லவர்களான இந்தத் தீய சக்திக் கூட்டத்திற்குத் தமிழக மக்களும், தாராபுரம் தொகுதி மக்களும் தக்க பதிலடியைக் கொடுக்கத்தான் போகின்றனர். தொடர்ந்து பெண்களை ஆபாசமாகப் பேசி வரும் தீய சக்தி திமுகவிற்குத் தமிழகப் பெண்களின் மகனாக, அண்ணனாக, தம்பியாக எனது வன்மையான கண்டனங்களைத் தெரிவித்துக்கொள்கிறேன்" எனத் தெரிவித்துள்ளார்.