ஸ்ரீவைகுண்டத்தைச் சேர்ந்த தவெக பெண் நிர்வாகி, தான் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டதாகக் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்தச் சம்பவத்தில் விஜி சரவணனுக்குத் தொடர்பிருப்பதாகப் பாதிக்கப்பட்ட பெண் கூறியபோதும், காவல் நிலைய அதிகாரிகள் அவரது பெயரை வழக்கில் சேர்க்க மறுத்ததாகவும், விசாரணைக்குத் தன்னை அழைக்கவில்லை என்றும் பாதிக்கப்பட்ட பெண் குற்றம் சாட்டினார்.
சட்டப்பேரவையில் எதிர்க்கட்சிகள் இதுகுறித்து கேள்வி எழுப்பிய நிலையில், இச்சம்பவத்திற்கும் விஜி சரவணனுக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை என என். ஆனந்த் கூறினார்.
இந்நிலையில், இச்சம்பவம் குறித்து அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் தமிழ்நாடு மாநிலக் குழு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: "பாதிக்கப்பட்ட பெண்ணிடமே விசாரணை நடத்தப்படாத நிலையில், எந்த அடிப்படையில் இந்த வழக்கில் விசாரணை நடைபெற்றது? அவரது வாக்குமூலம் ஏதுமின்றி புகாரின் உண்மைத்தன்மை எவ்வாறு மதிப்பீடு செய்யப்பட்டது?
குற்றஞ்சாட்டப்பட்டவர் அரசியல் அதிகாரம் கொண்டவர் என்பதற்காக அவரை விசாரணையிலிருந்து விடுவிப்பதை ஏற்க முடியாது. எனவே, இதுவரை நடத்தப்பட்ட விசாரணையை வெளிப்படையாக விளக்க வேண்டும். தேவைப்பட்டால் மறுவிசாரணை நடத்தி, எந்தவொரு அரசியல் தலையீடும் இல்லாமல் உண்மையைக் கொண்டு வர வேண்டும். பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றச்சாட்டுகளில் அதிகார அழுத்தத்திற்கு இடமளிக்காமல், பாதிக்கப்பட்ட பெண்ணின் பக்கமே அரசு நிற்க வேண்டும்" என அந்த அறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

