எதிர்வரும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தற்காலிக பட்டாசு உரிமம் பெற இணைய வழியில் விண்ணப்பிக்கலாம். ஆண்டுதோறும் தீபாவளி பண்டிகைக்காக பட்டாசு கடைகள் நடத்த கட்டாயம் அனுமதி பெற வேண்டும் என்ற கட்டுப்பாடு இருந்து வருகிறது.

இந்த வகையில் இந்த ஆண்டு தீபாவளி பண்டிகையையொட்டி கன்னியாகுமரி மாவட்டத்தில் தற்காலிக பட்டாசு கடைகள் நடத்த வெடிபொருள் சட்டம் 1884 மற்றும் வெடிபொருள் விதிகள் 2008 -இன் கீழ் தற்காலிக பட்டாசு உரிமம் கோரி மாவட்ட ஆட்சியருக்கு இணைய வழியில் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பங்கள் வருகிற 18.10.2026-ஆம் தேதிக்கு முன்னதாக கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள இ-சேவை மையங்களில் குறிப்பிட்ட ஆவணங்களுடன் இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும்.

அனுமதி வேண்டி விண்ணப்பிப்பவர்கள், மனை வரைபடம், கடை அமையவிருக்கும் இடத்தின் வரைபடம், கடை அமையவிருக்கும் இடத்தின் பட்டா மற்றும் இதர ஆவணங்களுடன், உரிய கணக்கு தலைப்பின் கீழ் (Head of Account: 0070-other Administrative services 60-other services 103 Receipts under Explosive Act 01 Collector of Distric Authorities E-challan code no. 0070-60-109-AA-22738) அரசு கணக்கில் தற்காலிக பட்டாசு உரிமக்கட்டணம் ரூ.600/-ஐ பாரத ஸ்டேட் வங்கியில் செலுத்தியதற்கான அசல் ரசீதினை (செலான்) இணைக்க வேண்டும்.

மேலும் மனுதாரர், தற்காலிக பட்டாசு உரிமம் கோரும் இடத்தின் உரிமையாளர் என்றால் அதற்கான ஆவணங்கள் மற்றும் நடப்பு நிதி ஆண்டின் சொத்து வரி செலுத்திய ரசீது நகல், வாடகை கட்டிடம் என்றால் வரி செலுத்திய ரசீது நகலுடன் இடத்தின் உரிமையாளரிடம் ரூ.20/-க்கான முத்திரைத்தாளில் பெறப்பட்ட அசல் சம்மத கடிதமும் விண்ணத்தாரரின் புகைப்படம், முகவரி சான்று உள்ளிட்டவற்றையும் சமர்ப்பிக்க வேண்டும்.

மேலும் நிர்வாக காரணங்கள் முன்னிட்டு வருகிற 18.10.2026-ம் தேதிக்குள் தற்காலிக பட்டாசு உரிமம் கோரி வரப்பெறும் விண்ணப்பங்கள் மட்டுமே பரிசீலனை செய்யப்படும். அக்டோபர் 18-ம் தேதிக்கு பின்னர் இ-சேவை மையங்கள் மூலம் விண்ணப்பிப்பவர்களின் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது இவ்வாறு மாவட்ட ஆட்சியர் மு.பிரதாப், தெரிவித்துள்ளார்.