நாசரேத் அருகே உள்ள எழுவரைமுக்கியைச் சேர்ந்தவர் ரத்தினராஜ். இவரது மனைவி கன்னிமரியாள் (41). இவர்களுக்குத் திருமணம் ஆகி இரண்டு மகன்கள் உள்ள நிலையில், இருவரும் வெளியூரில் கல்லூரிப் படித்து வருகின்றனர். கன்னிமரியாளுக்கு வயிற்றிலிருந்த கட்டி சம்பந்தமாக நாசரேத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் கடந்த 7ஆம் தேதி சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மருத்துவர்களின் பரிசோதனைக்குப் பின் 8ஆம் தேதி அவருக்கு வயிற்றிலிருந்த கட்டி அறுவை சிகிச்சை மூலம் அகற்றப்பட்டுள்ளது. பின்னர் 10ஆம் தேதி மேல் சிகிச்சைக்காகத் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், சிகிச்சை பலனின்றி கடந்த 11ஆம் தேதி பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்து அளிக்கப்பட்ட புகாரின் பேரில் நாசரேத் இன்ஸ்பெக்டர் வனசுந்தர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தார். இந்நிலையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட செயலாளர்கள் திருச்செந்தூர் - விடுதலைச் செழியன் மற்றும் ஸ்ரீவைகுண்டம் - திருமாசுரேந்தர் தலைமையில் விசிக கட்சியினர், கன்னிமரியாளின் உறவினர்கள் மற்றும் எழுவரைமுக்கி ஊர் பொதுமக்கள் கன்னிமரியாளின் சாவுக்கு நீதி வேண்டி நாசரேத் சந்தி பஜாரில் அமர்ந்து பஸ் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்தப் போராட்டம் நாசரேத் சந்தி பஜாரில் சுமார் 1 மணி நேரம் நீடித்தது. இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சாத்தான்குளம் துணை கண்காணிப்பாளர் செல்வராஜ் மற்றும் மெஞ்ஞானபுரம் இன்ஸ்பெக்டர் இசக்கிதுரை ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து அவர்கள் போராட்டத்தைக் கைவிட்டுக்கலைந்து சென்றனர்.