தமிழ்நாடு அரசில் பணிபுரியும் திருமணமான ஆண் பணியாளர்களுக்கு முதன்முறையாக 15 நாட்கள் தந்தையர் மகப்பேறுகால விடுப்பு வழங்கி முதலமைச்சர் ஜோசப் விஜய் உத்தரவிட்டுள்ளார். இந்த விடுப்பினைக் குழந்தை பிறப்பதற்கு 15 நாட்களுக்கு முன்பிருந்தோ அல்லது குழந்தை பிறந்த தேதியிலிருந்து 6 மாதங்களுக்குள்ளாகவோ எடுத்துக் கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாகத் தமிழ்நாடு அரசு சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: "தமிழ்நாடு அரசில் பணிபுரியும் பெண் பணியாளர்களுக்கு 365 நாட்கள் மகப்பேறு விடுப்பு வழங்கப்பட்டு வரும் நிலையில், அரசு ஆண் பணியாளர்களுக்கும் தந்தையர் மகப்பேறுகால விடுப்பு வழங்கப் பரிசீலிக்க வேண்டும் என்ற கோரிக்கை பணியாளர்களிடமிருந்து அரசுக்கு வரப்பெற்றது.

தாய்க்குக் குழந்தை பிறக்கும் காலகட்டம் என்பது தாய் மற்றும் குழந்தைக்கு மிகவும் முக்கியமானதாகும். உடல், மனரீதியான ஆதரவு வழங்குவதுடன் குழந்தை பராமரிப்பிலும் தந்தையின் பங்களிப்பு அவசியமாகிறது. பெண் அரசுப் பணியாளர்களுக்கு 365 நாட்கள் மகப்பேறு விடுப்பு வழங்கப்படுவது தாய்மை மற்றும் குழந்தை நலனுக்கு அளிக்கப்படும் முக்கியத்துவத்தை வெளிப்படுத்துகிறது. அதேபோன்று, ஆண் அரசுப் பணியாளர்களுக்கும் தந்தையர் மகப்பேறுகால விடுப்பு வழங்கப்படுவது குடும்பப் பொறுப்புகளைப் பகிர்ந்து கொள்ளவும், குழந்தை வளர்ப்பில் தந்தையின் பங்களிப்பை உறுதிப்படுத்தவும் உதவும்."

விடுப்பு எடுத்துக்கொள்ளும் விதிமுறைகள்:

இக்கோரிக்கையைத் தமிழ்நாடு அரசு கனிவுடன் பரிசீலித்து, திருமணமான ஆண் அரசுப் பணியாளர்களுக்கு அவர்களின் மனைவியின் மகப்பேறு காலத்தில் உடனிருக்க ஏதுவாக 15 நாட்கள் தந்தையர் மகப்பேறுகால விடுப்பு வழங்கி ஆணை பிறப்பித்துள்ளது.

அதன்படி, தகுதியுள்ள ஆண் அரசு ஊழியர்கள் இந்த 15 நாட்கள் விடுப்பினைக் குழந்தை பிறப்பதற்கு 15 நாட்களுக்கு முன்பிருந்தோ அல்லது குழந்தை பிறந்த தேதியிலிருந்து ஆறு மாதங்களுக்குள்ளாகவோ எடுத்துக் கொள்ளலாம் என அரசு ஆணையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு அரசு ஊழியர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றுள்ளது.