சென்னையிலிருந்து விமானம் மூலம் தூத்துக்குடி வாகைக்குளம் விமான நிலையத்திற்கு வந்த பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேட்டி அளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது: கரூர் பசுபதீஸ்வரர் கோயிலுக்குச் சொந்தமான 3,000 ஏக்கர் நிலங்களுக்குப் பட்டா வழங்கப்பட்ட முறைகேடு தகவலைத் முதலில் வெளிப்படுத்தியவர் நான்தான்; தற்போது நீதிமன்றம் அதற்கு இடைக்காலத் தடை விதித்துள்ளது.
கடந்த திமுக ஆட்சியில் கோவை பெரியார் அறிவுலகத்திற்குப் புத்தகங்கள் கொள்முதல் செய்யப்பட்டதில் ஊழல் நடந்துள்ளதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. திமுக மீது குற்றம் சாட்டும் தவெகவினரும் தற்போது ஊழலில் ஈடுபட்டுள்ளனர்.
தமிழகத்தில் குதிரை பேரத்தைத் தொடங்கி வைத்ததே தவெகதான்; இதனால் தான் இரண்டு தொகுதிகளில் இடைத்தேர்தல்கள் நடந்து முடிந்துள்ளன.
திமுக ஆட்சியைவிடத் தவெக ஆட்சியில் போதைப்பொருள் புழக்கம் அதிகரித்துவிட்டது. அரசு அதைக் கட்டுப்படுத்தத் தவறிவிட்டது. சட்டம்-ஒழுங்கு சரியில்லாததால் 350-க்கும் மேற்பட்ட கொலை, கொள்ளை சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன. இதனால் "எதற்காக தவெகவுக்கு வாக்களித்தோம்" என்று மக்கள் சிந்திக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
மீனவர்களைக் காப்பாற்றத் தவெக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். ஈரானில் போர் நடைபெற்றபோது அங்கு சிக்கிய 742 தமிழர்களைப் பிரதமர் மோடி 20 மணி நேரத்தில் பாதுகாப்பாக மீட்டு வந்ததைச் சுட்டிக்காட்டிய அவர், மீனவர்களுக்குப் பாதுகாப்பாக இருப்பது மத்திய அரசு மட்டும்தான் என்றார்.

