தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய் பெயரில் அறக்கட்டளை நடத்தி நிதியுதவி மற்றும் சிறுதொழில் கடன் தருவதாகக் கூறி, ஆன்லைன் மூலம் லட்சக்கணக்கில் பண மோசடி செய்யப்பட்டுள்ள சம்பவம் மத்திய பிரதேசத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழக முதல்வர் ஜோசப் விஜய்க்குச் சொந்தமான அறக்கட்டளையின் நிர்வாகிகள் எனக் கூறிக்கொண்டு, மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த பொதுமக்களை ஆன்லைன் மூலம் ஒரு கும்பல் தொடர்பு கொண்டுள்ளது. அவர்கள் சிறுதொழில் தொடங்கக் கடன் மற்றும் நிதியுதவி வழங்குவதாக ஆசை வார்த்தைகளைக் கூறியுள்ளனர்.

அதனை நம்பிய மக்களிடம் பதிவுக் கட்டணம், சரிபார்ப்புக் கட்டணம், செயலாக்கக் கட்டணம் (Processing Fee) எனப் பல்வேறு பெயர்களில் நபர் ஒருவருக்கு ரூ. 1,000 முதல் ரூ. 50,000 வரை அக்கும்பல் வசூலித்துள்ளது. பணத்தைப் பெற்றுக் கொண்ட பிறகு, உறுதியளித்தபடி கடனோ நிதியுதவியோ வழங்காமல் ஏமாற்றி மோசடியில் ஈடுபட்டுள்ளனர்.

இம்மாநிலத்தின் இந்தூர் நகரில் தமிழக முதல்வர் விஜய் பெயரில் இதுபோன்று மோசடி நடந்துள்ளதாகக் கடந்த மாதம் ஆறு புகார்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன என குற்றத்தடுப்புப் பிரிவு கூடுதல் துணை கமிஷனர் ராஜேஷ் தன்டோடியா தெரிவித்தார்.

இப்புகார்கள் குறித்துத் தீவிர விசாரணை நடைபெற்று வருவதாகத் தெரிவித்த அவர், இதுபோன்ற போலி வாக்குறுதிகளை நம்பி பணத்தை இழக்க வேண்டாம் என்றும், பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறும் அறிவுறுத்தியுள்ளார்.