நடிகர் அஜித் மற்றும் நடிகை நயன்தாரா ஆகியோர் தாங்கள் நடிக்கும் திரைப்படங்களின் விளம்பர (புரமோஷன்) நிகழ்ச்சிகளில் பங்கேற்காதது குறித்துத் தமிழ்நாடு மல்டிபிளக்ஸ் தியேட்டர் உரிமையாளர் சங்கத்தின் தலைவரும், விநியோகஸ்தருமான திருப்பூர் சுப்பிரமணியம் கடுமையாக விமர்சித்துள்ளார்.
திருப்பூர், கோயம்புத்தூர், ஈரோடு, தாராபுரம், கோபி உள்ளிட்ட ஊர்களில் திரையரங்குகளை நடத்தி வருபவர் திருப்பூர் சுப்பிரமணியம். இவர் தனது திரையரங்கின் யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில், அஜித் மற்றும் நயன்தாரா ஆகியோர் பட விளம்பர நிகழ்ச்சிகளைத் தவிர்ப்பது குறித்துக் கருத்து தெரிவித்துள்ளார்.
அந்தப் பேட்டியில் அவர் கூறுகையில், "அஜித், நயன்தாரா இருவரும் தாங்கள் நடிக்கும் படங்களின் புரமோஷன் நிகழ்ச்சிகளுக்கு வருவதில்லை. அவ்வாறு பங்கேற்பதை ஏதோ பெரிய கவுரவக் குறைவாகக் கருதுகிறார்கள்; தலைக்குமேல் கிரீடம் இருப்பதாக நினைக்கிறார்கள். திரைப்படங்களின் விளம்பர நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வது தங்களுக்குத் தேவையில்லை என்ற மனநிலையில் அவர்கள் உள்ளனர்" எனத் தனது அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார்.
மேலும் பேசிய அவர், "இதே அணுகுமுறை தொடர்ந்து நீடித்தால், இருவரும் ஒரு கட்டத்தில் சினிமாவிலிருந்து காணாமல் போய்விடும் சூழல் உருவாகலாம். முன்னணி நடிகர்கள் அதிக சம்பளம் பெறும் நிலையில், அவர்களை நம்பி கோடிக்கணக்கில் முதலீடு செய்யும் தயாரிப்பாளர்களுக்கு ஆதரவாக இருப்பதும் அவசியம். படத்தின் விளம்பர நிகழ்ச்சிகளில் பங்கேற்பது தயாரிப்பாளர்களுக்கும், படக்குழுவினருக்கும் அளிக்கும் ஆதரவாக அமையும்" எனத் தெரிவித்துள்ளார்.

