17 கைதிகள் தப்பிச் செல்லும் அளவுக்கு சிறையில் பாதுகாப்பு பலவீனமாக இருக்கிறது என்றும், அலட்சியமாக இருந்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் அறிக்கை: "தேனி மாவட்டம் தேக்கம்பட்டி பகுதியில் உள்ள மாவட்ட சிறையில் அடைத்து வைக்கப்பட்டிருந்த கைதிகளில் 17 பேர் நேற்றிரவு சிறைக்காவலர்களை தாக்கிவிட்டு தப்பி ஓடியிருப்பது பெரும் அதிர்ச்சியளிக்கிறது. போக்சோ வழக்குகள் மற்றும் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்ட கைதிகள் தப்பிச் செல்லும் அளவுக்கு மாவட்ட சிறையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலவீனமாக இருந்தது கடுமையாக கண்டிக்கத்தக்கது.
திரைப்படக் காட்சிகளில் மட்டுமே இடம்பெற்று வந்த கைதிகள் தப்பி ஓடுவது போன்ற சம்பவங்கள், தற்போது நிஜத்திலும் நடக்கத் தொடங்கியிருப்பது நல்லதல்ல. சட்டம் - ஒழுங்கை பாதுகாக்க வேண்டிய காவல்துறை மற்றும் சிறைத்துறை போன்ற முக்கியத் துறைகளின் நிர்வாகம் பலவீனமடைந்து வருவதையே இது காட்டுகிறது. மாவட்ட சிறையில் இருந்த அனைத்து காவலர்களையும் தாக்கிவிட்டு, ஒரே நேரத்தில் 17 கைதிகள் தப்பி ஓடியிருப்பதை மிகவும் சாதாரணமான நிகழ்வாக எடுத்துக்கொள்ள முடியாது. இது சிறைத்துறையின் அப்பட்டமான தோல்வியையே காட்டுகிறது.
சிறையிலிருந்து கைதிகள் தப்பி ஓடியதாகக் கூறப்படும் நேரத்திற்கும், இந்நிகழ்வு குறித்து காவல்துறைக்குத் தகவல் தெரிவிக்கப்பட்ட நேரத்திற்கும் அதிக இடைவெளி இருப்பது பல்வேறு ஐயங்களை எழுப்பியுள்ளது. கைதிகள் தப்பி ஓடி 12 மணி நேரத்திற்கு மேலாகியும் இதுவரை 4 பேர் மட்டும்தான் கைது செய்யப்பட்டுள்ளனர்.
எனவே, தேனி சிறையிலிருந்து தப்பி ஓடிய கைதிகள் அனைவரையும் உடனடியாக கைது செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். கைதிகள் தப்பி ஓடியதன் பின்னணியில் ஏதேனும் திட்டம் உள்ளதா? என்பது குறித்தும் தீவிர விசாரணை நடத்தப்பட வேண்டும். மேலும், இந்த விஷயத்தில் அலட்சியமாகச் செயல்பட்ட சிறைத்துறை அதிகாரிகள் அனைவரும் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்" என வலியுறுத்தியுள்ளார்.

