கல்லிடைக்குறிச்சி அருகே தெற்கு பாப்பான்குளத்தைச் சேர்ந்தவர் வெங்கடேஷ் (29). ரியல் எஸ்டேட் தொழில் செய்து வரும் இவர், தற்போது விகேபுரம் அருகே அகஸ்தியர்பட்டியில் வாடகை வீட்டில் வசித்து வருகிறார். இவரும், சென்னை மண்ணடியைச் சேர்ந்த முகமது அக்தர் (23) என்பவரும் தொழில் ரீதியாக நண்பர்கள்.
இந்நிலையில், சென்னை தண்டையார்பேட்டையைச் சேர்ந்த தொழிலதிபர் ஜெயச்சந்திரன் (47) என்பவர் ரூ. 1 கோடி கடன் தேவைப்படுவதாக முகமது அக்தரை அணுகியுள்ளார். அதற்குத் தனக்குத் தெரிந்த நபர்கள் மூலம் கடன் தொகையைப் பெற்றுத் தருவதாகவும், அதற்கு ரூ. 1 லட்சம் கமிஷன் வழங்க வேண்டும் என்றும் முகமது அக்தர் கூறியுள்ளார்.
இதற்கு சம்மதித்த ஜெயச்சந்திரனை அகஸ்தியர்பட்டியில் உள்ள வெங்கடேஷின் வீட்டிற்கு முகமது அக்தர் அழைத்துச் சென்றுள்ளார். அங்கு கத்தையாகப் பணம் இருப்பது போன்று காண்பித்து, ஜெயச்சந்திரனிடம் கடன் பத்திரத்திலும், 7 வங்கி காசோலைகளிலும் கையெழுத்துப் பெற்றுக் கொண்டுள்ளனர். ஆனால் கடன்தொகையை உடனடியாக வழங்கவில்லை.
இதனால் சந்தேகமடைந்த ஜெயச்சந்திரன் இது தொடர்பாக விகேபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் அம்பை டிஎஸ்பி கணேஷ்குமார் தலைமையிலான போலீசார் அகஸ்தியர்பட்டியில் உள்ள வெங்கடேஷ் வீட்டில் சோதனை மேற்கொண்டனர்.
அப்போது, வீட்டின் மாடியில் உள்ள பெட்டியில் மேல்பகுதியில் மட்டும் ரூ. 500 நோட்டுகள் அடங்கிய 6 கட்டுகள் (ரூ. 3.68 லட்சம்) உண்மையான ரொக்கமாகவும், மற்றவை டம்மி நோட்டுகளாகவும், ரூபாய் அளவில் வெட்டப்பட்ட வெள்ளை தாள்களாகவும் இருப்பத்தைக் கண்டு போலீசார் அதிர்ச்சியடைந்தனர்.
ரூ. 10 லட்சம் முதல் ரூ. 1 கோடி வரை பெரிய தொகைகள் கடன் தேவைப்படுவோரைக் குறிவைத்து, கடன் பத்திரத்தில் கையெழுத்துப் பெற்றுக் கொண்டு, ரூ. 1 லட்சம் முதல் ரூ. 5 லட்சம் வரை கமிஷனாக வாங்கி ஏமாற்றுவதை இக்கும்பல் வழக்கமாகக் கொண்டுள்ளது தெரியவந்தது.
இதனைத் தொடர்ந்து விகேபுரம் போலீசார் வழக்குப் பதிவு செய்து, தெற்கு பாப்பான்குளத்தைச் சேர்ந்த வெங்கடேஷ் (29), ராஜேஷ் (23), சிவசுப்பிரமணியன் (23), கதிர்வேல் பாண்டி (23) மற்றும் சென்னையைச் சேர்ந்த முகமது அக்தர் (23) ஆகிய 5 பேரையும் கைது செய்து, அம்பை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திப் பாளையங்கோட்டை சிறையில் அடைத்தனர்.
எஸ்பி விஷ்வேஷ் பா. சாஸ்திரி எச்சரிக்கை:
"பொதுமக்கள் இதுபோன்ற மோசடி முயற்சிகளில் சிக்காமல் விழிப்புடன் இருக்குமாறும், அறிமுகமில்லாத நபர்கள் மூலம் அதிக தொகை கடன் பெற்றுத் தருவதாகக் கூறப்படும் ஆசைவார்த்தைகளை நம்பி பணம் அல்லது முக்கிய ஆவணங்களை வழங்க வேண்டாம்" எனத் திருநெல்வேலி மாவட்ட எஸ்பி விஷ்வேஷ் பா. சாஸ்திரி அறிவுறுத்தியுள்ளார்.

