மதுரையில் இருந்து பெயிண்ட் லோடு ஏற்றிக்கொண்டு மினி லாரி ஒன்று சனிக்கிழமை காலையில் நாகர்கோவிலுக்குப் புறப்பட்டுச் சென்றுள்ளது. லாரியை மதுரை நரிமேடு மருதுபாண்டியர் நகரைச் சேர்ந்த சக்திவேல் (51) ஓட்டிச் சென்றுள்ளார்.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியை அடுத்த நாலாட்டின்புத்தூர் தனியார் பள்ளி அருகே உள்ள நான்குவழிச்சாலை வளைவில் லாரி சென்றபோது, எதிர்பாராதவிதமாகச் சாலையோர தடுப்புக் கம்பியில் பலமாக மோதி கவிழ்ந்தது. இவ்விபத்தில் லாரியில் இருந்த ஏராளமான பிளாஸ்டிக் வாளிகள் உடைந்து, அதற்குள் இருந்த பெயிண்ட் சாலையில் கொட்டி ஆறாகப் பெருக்கெடுத்து ஓடியது.

இதில் லாரி ஓட்டுநர் சக்திவேல் காயமடைந்தார். அவ்வழியாகச் சென்றவர்கள் உடனடியாக நாலாட்டின்புத்தூர் காவல் நிலையத்திற்குத் தகவல் தெரிவித்தனர். விரைந்து வந்த போலீசார், காயமடைந்த ஓட்டுநர் சக்திவேலை மீட்டுச் சிகிச்சைக்காகக் கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

மினி லாரி கவிழ்ந்ததில் சுமார் ரூ.5 லட்சம் மதிப்பிலான பெயிண்ட் சாலையில் கொட்டி வீணானது. சாலையில் கொட்டித் தீர்ந்த பெயிண்டை நெடுஞ்சாலைத்துறை ஊழியர்கள் மணல் மற்றும் தண்ணீரைப் பயன்படுத்தி அப்புறப்படுத்தினர். இதனால் அப்பகுதியில் சுமார் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இச்சம்பவம் குறித்து நாலாட்டின்புத்தூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.