கடல் சீற்ற எச்சரிக்கை காரணமாக தூத்துக்குடி மாவட்டத்தில் விசைப்படகுகள் மற்றும் நாட்டுப்படகுகள் மீன்பிடிக்கக் கடலுக்குச் செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்திய தேசிய பெருங்கடல் தகவல் சேவை மையம் (INCOIS) மற்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் அளித்துள்ள எச்சரிக்கையைத் தொடர்ந்து, தூத்துக்குடி மாவட்டத்தில் செப்டம்பர் 18 மற்றும் 19 ஆகிய தேதிகளில் கடல் சீற்றம் அதிகமாக இருக்கும் என்பதால், மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை உத்தரவிட்டுள்ளது.
தூத்துக்குடி மாவட்டக் கடலோரப் பகுதிகளில் வழக்கத்தை விட உயரமான கடல் அலைகள் எழும் என்றும், தாழ்வான கடலோரப் பகுதிகளுக்குள் கடல் நீர் உட்புகக்கூடும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து, தூத்துக்குடி மீன்பிடித் துறைமுக மேலாண்மை அறிவிப்புப் பலகையிலும், மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை உதவி இயக்குநர் அலுவலக சுற்றறிக்கையிலும் நாளை (19.09.2026) ஒரு நாள் விசைப்படகுகள் மற்றும் நாட்டுப்படகுகள் மீன்பிடிக்கக் கடலுக்குச் செல்ல வேண்டாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

