தூத்துக்குடி மாவட்டம் குரும்பூர் முஸ்லிம் பெரிய தெருவைச் சேர்ந்தவர் நூர்தீன் மகன் தமீம் அன்சாரி (46). ஆட்டோ ஓட்டுநரான இவர், குரும்பூர் ரயில் நிலையம் அருகே உள்ள ஆட்டோ ஸ்டாண்டில் தொழில் செய்து வருகிறார். அதே ஸ்டாண்டில் வீரமாணிக்கம் வடக்கு தெருவைச் சேர்ந்த தங்கத்துரை மகன் சங்கரமூர்த்தி (44) என்பவரும் ஆட்டோ ஓட்டி வருகிறார்.
சங்கரமூர்த்தி திருச்செந்தூரில் உள்ள ஒரு தனியார் வங்கியில் கடன் பெற்று ஆட்டோ வாங்கி இருந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், நேற்று ஆட்டோ ஸ்டாண்டிற்கு வந்த தனியார் வங்கி மேனேஜர், கடன் நிலுவை தொடர்பாக சங்கரமூர்த்தியின் ஆட்டோ எங்கே இருக்கிறது என்று தமீம் அன்சாரியிடம் கேட்டுள்ளார். அதற்குத் தமீம் அன்சாரி அந்த ஆட்டோ நிற்கும் இடத்தை வங்கி மேனேஜரிடம் காட்டியுள்ளார்.
இதையறிந்து அங்கு வந்த சங்கரமூர்த்தி, "நீ எப்படி என் ஆட்டோவை வங்கி மேனேஜரிடம் காட்டிக் கொடுக்கலாம்?" என்று கூறி தமீம் அன்சாரியுடன் தகராறில் ஈடுபட்டுள்ளார். வாக்குவாதம் முற்றியதில் ஆத்திரமடைந்த சங்கரமூர்த்தி, தான் கையில் வைத்திருந்த கத்தியால் தமீம் அன்சாரியைச் சரமாரியாகக் குத்திவிட்டு, அவருக்குக் கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.
இதில் முகம் மற்றும் கை பகுதிகளில் பலத்த காயமடைந்த தமீம் அன்சாரி மீட்கப்பட்டு, சிகிச்சைக்காகத் தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இச்சம்பவம் குறித்துத் தமீம் அன்சாரி அளித்த புகாரின் பேரில், குரும்பூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து, சங்கரமூர்த்தியைக் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

