தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச்சாவடிகளை ஒட்டி 20 கிலோமீட்டர் சுற்றளவில் வசிப்பவர்களுக்கு ‘பாஸ்டேக்’ அடிப்படையிலான புதிய வருடாந்திர ‘பாஸ்’ திட்டம் வரும் நவம்பர் 1-ஆம் தேதி முதல் அமல்படுத்தப்படும் என தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் அறிவித்துள்ளது.

தற்போது சுங்கச்சாவடிகளை ஒட்டி 20 கிலோமீட்டர் சுற்றளவில் வசிக்கும் உள்ளூர்வாசிகள், வணிக நோக்கமற்ற சொந்த வாகனங்களுக்கு மாதம் ரூ.350 செலுத்தி டிஜிட்டல் முறையிலான ‘பாஸ்’களை பெற்றுப் பயன்படுத்தி வருகின்றனர். ஆனால், சுங்கச்சாவடிகளைப் பயன்படுத்த ஒவ்வொரு மாதமும் இந்தக் கட்டணத்தைப் புதுப்பிப்பதற்குச் சிரமமாக இருப்பதாக நெடுஞ்சாலை ஆணையத்திடம் புகார்கள் தெரிவிக்கப்பட்டன.

இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், ஆண்டுக்கு ஒருமுறை மட்டும் புதுப்பிக்கும் வகையில் புதிய ‘பாஸ்டேக்’ அடிப்படையிலான வருடாந்திர ‘பாஸ்’ திட்டத்தை மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் ஆணையம் அறிவித்து அதற்கான அரசிதழையும் வெளியிட்டுள்ளது.

கட்டண விவரங்கள்:

நகராட்சி/நகர எல்லைக்கு வெளியே சுங்கச்சாவடிகளுக்கு ஆண்டுக் கட்டணமாக ரூ.1,500 நிர்ணயிக்கப்பட்டுள்ளது. நகராட்சி/நகர எல்லைக்கு உள்ளே சுங்கச்சாவடிகளுக்கு ஆண்டுக் கட்டணமாக ரூ.3,000 நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த வசதி வரும் நவம்பர் 1-ஆம் தேதி முதல் அமலுக்கு வர உள்ளது.

சுங்கச்சாவடியை ஒட்டி 20 கிலோமீட்டர் எல்லைக்குள் இருப்பவர்கள் தகுந்த ஆவணங்களைச் சம்மந்தப்பட்ட சுங்கச்சாவடியில் சமர்ப்பித்து இந்த வருடாந்திர பாஸைப் பெற்றுக்கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வருடாந்திர பாஸ் குறிப்பிட்ட நிபந்தனைகளுக்கு உட்பட்டது. சுங்கச்சாவடியின் அருகாமையில் சர்வீஸ் சாலை அல்லது மாற்றுப்பாதை இருக்கும் பட்சத்தில், உள்ளூர் மக்களுக்கான இந்த வருடாந்திர சலுகை பாஸ் வழங்கப்படாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.