சென்னை பதிவுத்துறைத் தலைவரின் உத்தரவின்படி (க.எண் 29590/எல்2/2026), கன்னியாகுமரி மாவட்டத்திற்குட்பட்ட கன்னியாகுமரி பதிவு மாவட்டம் மற்றும் மார்த்தாண்டம் பதிவு மாவட்டம் ஆகியவற்றின் கீழ் செயல்படும் சார்பதிவாளர் அலுவலகங்களில் நிலவும் சொத்து வழிகாட்டி மதிப்பு முரண்பாடுகள் கண்டறியப்பட்டுச் சரிசெய்யப்பட்டுள்ளன.

இவ்வாறு சரிசெய்யப்பட்ட வழிகாட்டி மதிப்புகளுக்கு மாவட்டத் துணைக் குழுவின் ஒப்புதல் பெறுவதற்காக, மாவட்ட ஆட்சியர் தலைமையில் கூட்டம் நடத்தத் திட்டமிடப்பட்டது. இதனைத் தொடர்ந்து, கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியரகத்தில் உள்ள குறள் அரங்கில் நாளை (08.09.2026 - செவ்வாய்க்கிழமை) மாலை 3.00 மணியளவில் இக்கூட்டம் நடைபெறவுள்ளது.

இக்கூட்டம் தொடர்பான தகவல்களைப் பெற நாகர்கோவிலில் உள்ள கன்னியாகுமரி மாவட்டப் பதிவாளர் (நிர்வாகம்) / உதவிப் பதிவுத்துறைத் தலைவர் அலுவலக முகவரியைத் தொடர்புகொள்ளலாம் என மாவட்டச் செய்தி மக்கள் தொடர்பு அலுவலகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.