தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட வேம்பார் ஊராட்சியில் பல்வேறு துறைகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் செயல்பாடுகள் குறித்து மாவட்ட ஆட்சியர் விஷு மகாஜன் இன்று ஆய்வு மேற்கொண்டார்.

விளாத்திகுளம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட வேம்பார் ஊராட்சி சூரங்குடியில் பகுதியில் மாவட்ட தொழில் மையம் சார்பில் ரூ.5.29 கோடி மதிப்பீட்டில் வேம்பார் கருப்பட்டி மற்றும் பனைப் பொருட்கள் குறுங்குழுமம் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருவதையும், ஊரக வளர்ச்சி துறை சார்பில் வேம்பார் ஊராட்சி சிலுவைபுரம் கிராமத்தில் 15 வந்து நிதிக்குழு) கீழ் 10000 லிட்டர் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருவதையும்,

வேம்பார் ஊராட்சியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் 1000 நபர்கள் தங்கும் இடவசதி கொண்ட பல்நோக்கு புகலிட வெள்ள நிவாரண முகாமில் அடிப்படை உட்கட்டமைப்பு வசதிகள் குறித்தும், அதே பகுதியில் தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்கத்தின் கீழ் செயல்படும் செல்வ மகள் மகளிர் தையல் அலகின் செயல்பாடுகள் குறித்தும், தொடர்ந்து ஊராட்சி நூலகத்தின் செயல்பாடுகள் குறித்தும் மாவட்ட ஆட்சியர் விஷு மகாஜன் ஆய்வு மேற்கொண்டார்.

தொடர்ந்து மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை சார்பில் வேம்பார் கடற்கரை பகுதியில் நபார்டு திட்டத்தின் கீழ் ரூ.11 கோடி மதிப்பீட்டில் கடல் அரிப்பு பகுதிகளை சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருவதையும், மேலும், கடல் அரிப்பு உள்ள பகுதிகளை பார்வையிட்டு சீரமைப்பதற்கான நடவடிக்கைகள் குறித்து அலுவலர்களிடம் மாவட்ட ஆட்சியர் கேட்டறிந்தார்.

பின்னர் வேம்பர் தெற்கு பகுதியில் உள்ள வள மீட்பு பூங்காவின் இரண்டாம் நிலை குப்பைகளை மக்கும் குப்பை, மக்காத குப்பையாக தரம் பிரித்து உரங்கள் தயாரிக்கும் பணிகளை பார்வையிட்டு செயல்பாடுகள் குறித்து கேட்டறிந்தார். இந்நிகழ்வில் மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் சொர்ணலதா, மீன்பிடி திட்ட கோட்டம் உதவி பொறியாளர் வள்ளி மற்றும் அரசு துறை அலுவலர்கள் ஆகியோர் உள்ளனர்.