கோவை சூலூர் கவுண்டம்பாளையம் பகுதியில் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில், குற்றம் சாட்டப்பட்ட கார்த்தி மற்றும் மோகன்ராஜ் ஆகிய இருவரும் குற்றவாளிகள் என போக்சோ சிறப்பு நீதிமன்றம் இன்று (நவம்பர் 27) தீர்ப்பளித்துள்ளது.
கோவை மாவட்டம் சூலூர் அருகே அரசுப் பள்ளியில் 5-ஆம் வகுப்பு படித்து வந்த 10 வயது சிறுமி ஒருவர், கடந்த மே மாதம் 21-ஆம் தேதி மாலை வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்தபோது மாயமானார். காவல்துறை நடத்திய விசாரணையில், அருகிலுள்ள மளிகைக் கடைக்குச் சென்ற சிறுமியை அடையாளம் தெரியாத நபர் ஒருவர் இருசக்கர வாகனத்தில் வலுக்கட்டாயமாக ஏற்றிச் சென்றது தெரியவந்தது.
தொடர் விசாரணையில், சிறுமியை சாக்லெட் வாங்கித் தருவதாக ஆசை வார்த்தை கூறி இருசக்கர வாகனத்தில் அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்ததாக, சிறுமியின் பக்கத்து வீட்டைச் சேர்ந்த கார்த்தி மற்றும் அதற்கு உடந்தையாக இருந்த அவரது நண்பர் மோகன்ராஜ் ஆகிய இருவரையும் போலீசார் மே 23-ஆம் தேதி கைது செய்தனர்.
இந்தக் கொடூரச் சம்பவம் தொடர்பாக 21 நாட்களுக்குள் 819 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகையைக் காவல்துறை தாக்கல் செய்தது. சுமார் 6 மாதங்கள் நடைபெற்ற இந்த வழக்கின் விசாரணையில், அரசுத் தரப்பில் 68 சாட்சிகள் விசாரிக்கப்பட்டனர்; மேலும், சிசிடிவி காட்சிகள், மருத்துவம் மற்றும் டி.என்.ஏ பரிசோதனை அறிக்கைகள் உள்ளிட்ட 221 ஆவணங்கள் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டன.
ஏற்கெனவே கடந்த நவம்பர் 16-ஆம் தேதி தீர்ப்பு அறிவிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், வழக்கின் தீர்ப்பை நவம்பர் 27-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து போக்சோ நீதிமன்ற நீதிபதி ஹரிஹரன் உத்தரவிட்டிருந்தார்.
அதன்படி, இன்று வழக்கு விசாரணைக்கு வந்தபோது கார்த்தி மற்றும் மோகன்ராஜ் ஆகிய இருவரும் குற்றவாளிகள் என நீதிபதி தீர்ப்பளித்தார். மேலும், குற்றவாளிகள் இருவருக்கான தண்டனை விவரங்கள் வரும் டிசம்பர் 4-ஆம் தேதி அறிவிக்கப்படும் என்றும் நீதிபதி அறிவித்துள்ளார்.

