‘பண்ணையாரும் பத்மினியும்’, ‘சேதுபதி’, ‘சிந்துபாத்’, ‘சித்தா’ மற்றும் ‘வீர தீர சூரன்’ உள்ளிட்ட வெற்றிப் படங்களை இயக்கிய எஸ்.யு. அருண்குமார், அடுத்ததாகக் கமல்ஹாசனை வைத்துப் படம் இயக்கப் போவதாகத் தகவல்கள் பரவி வந்தன. இந்நிலையில், அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு தற்போது வெளியாகி உறுதி செய்யப்பட்டுள்ளது.
இத்திரைப்படத்தைக் கமல்ஹாசனின் 'ராஜ்கமல் இன்டர்நேஷனல்' மற்றும் ஆர். மகேந்திரனின் 'டர்மெரிக்' நிறுவனம் இணைந்து தயாரிக்கின்றன. இப்படத்திற்கான டெஸ்ட் ஷூட் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகின்றன. அதில் கமல்ஹாசன் கருப்புச் சட்டை, பச்சை நிறப் பேண்ட், கையில் அறிவாள் மற்றும் காலில் காக்கி பூட்ஸுடன் மிரட்டலான தோற்றத்தில் போஸ் கொடுத்துள்ளார்.
இத்திரைப்படம் அருண்குமாரின் முந்தைய படங்களைப் போல மண் சார்ந்த ஆக்ஷன் திரைப்படமாக இருக்கும் என்றும், இது குறைந்த காலகட்டத்தில் உருவாகும் படைப்பாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது. இப்படத்தின் தலைப்பு, கதாநாயகி மற்றும் பிற நடிகர்கள் குறித்த விவரங்கள் விரைவில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

