கன்னியாகுமரியில் திருமண ஆசை வார்த்தை கூறி 14 வயது சிறுமியைக் கடத்திச் சென்று பாலியல் பலாத்காரம் செய்த வாலிபருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நாகர்கோவில் போக்ஸோ நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
ஈரோடு மாவட்டம் பாரதிதாசன் தெருவைச் சேர்ந்தவர் ஜெய்சிங் (30), தொழிலாளி. இவர் கடந்த 2018-ஆம் ஆண்டு நாகர்கோவில் அருகே உள்ள ஒரு தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் படிப்பதற்காகக் கன்னியாகுமரி வந்தார். அப்போது கன்னியாகுமரி அருகே உள்ள தனது உறவினர் வீட்டில் தங்கிப் படித்து வந்துள்ளார்.
அங்குத் தங்கியிருந்தபோது, உறவினர் வீட்டில் இருந்த 14 வயதுச் சிறுமியுடன் ஜெய்சிங்கிற்குப் பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் அப்பழக்கம் காதலாக மாறியது. அதனைத் தொடர்ந்து ஜெய்சிங் அச்சிறுமியிடம் திருமண ஆசை வார்த்தைகளைக் கூறி வந்துள்ளார்.
கடந்த 08.07.2018 அன்று சிறுமி வீட்டில் தனியாக இருந்தபோது அங்கு வந்த ஜெய்சிங், சிறுமியை ஈரோட்டிற்குக் கடத்திச் சென்றார். அங்குள்ள ஒரு லாட்ஜில் சிறுமியைத் தங்க வைத்து, அவரை வலுக்கட்டாயமாகப் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.இதனிடையே, காணாமல் போன மகனைப் பல்வேறு இடங்களில் தேடிய பெற்றோர், பலனளிக்காததால் கன்னியாகுமரி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்திய காவல்துறையினர், சிறுமி ஈரோட்டில் இருப்பதை அறிந்துகொண்டு அங்குச் சென்று ஜெய்சிங்கைக் கைது செய்தனர். மேலும் சிறுமியையும் பாதுகாப்பாக மீட்டு வந்தனர்.
இவ்வழக்கு நாகர்கோவில் போக்ஸோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கின் விசாரணை முடிவடைந்த நிலையில், நீதிபதி சுந்தரய்யா தீர்ப்பளித்தார். சிறுமியைப் பாலியல் பலாத்காரம் செய்த குற்றத்திற்காக ஜெய்சிங்கிற்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனையும், ₹20,000 அபராதமும் விதித்து நீதிபதி உத்தரவிட்டார்.

