விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே உள்ள சத்தியமங்கலம் காவல் நிலையத்தில், வழக்குகளின் நெருக்கடிகள் மற்றும் தடைகளை நீக்குவதற்காகக் காவல் ஆய்வாளர் கணபதி ஹோமம் நடத்திய சம்பவம் அப்பகுதியில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

செஞ்சி அருகே உள்ள சத்தியமங்கலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஆலம்பூண்டி ஊராட்சி நடுப்பட்டு கிராமத்தில், கடந்த அக்டோபர் 12-ஆம் தேதி அதிகாலை 7 வயது சிறுமி ஒருவர் மாயமானார். உள்ளூர் போலீசார் தனிப்படைகள் அமைத்துத் தேடியும் பலன் இல்லாததால், இவ்வழக்கு சிபிசிஐடி-யிடம் ஒப்படைக்கப்பட்டது. 30 நாட்களுக்கும் மேலாகியும் இவ்வழக்கில் எவ்வித முன்னேற்றமும் ஏற்படவில்லை.

இதனிடையே, வனப்பகுதியில் சிபிசிஐடி போலீசார் தேடுதல் வேட்டை நடத்தியபோது எலும்புக்கூடுகள் கண்டெடுக்கப்பட்டன; மேலும் கிணற்றில் அழுகிய நிலையில் சடலம் ஒன்றும் மீட்கப்பட்டது. இதுதவிர, சத்தியமங்கலம் காவல் நிலைய எல்லையில் திருட்டு உள்ளிட்ட பல்வேறு வழக்குகளும் அதிகளவில் பதிவாகி வந்தன.

இந்தத் தொடர் சிக்கல்கள் மற்றும் வழக்குகளுக்குத் தீர்வு காணக் காவல் ஆய்வாளர் சுரேஷ்பாபு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டும் பலன் கிடைக்கவில்லை எனக் கூறப்படுகிறது. இதையடுத்து, காவல் நிலையத்திற்கு ஏற்பட்டுள்ள நெருக்கடிகளைத் தீர்க்கவும், தடைகளை நீக்கி வழக்குகளில் வெற்றி பெறவும் வேண்டி ஆய்வாளர் சுரேஷ்பாபு நேற்று (நவம்பர் 20) கணபதி ஹோமம் நடத்தியுள்ளார்.

சத்தியமங்கலம் காவல் நிலைய வளாகத்தில் தனது மனைவி மற்றும் சக காவலர்களுடன் இணைந்து ஆய்வாளர் சுரேஷ்பாபு பயபக்தியுடன் இந்தக் கணபதி ஹோமத்தை நடத்தி முடித்துள்ளார். இச்சம்பவத்தை அங்கிருந்த காவலர்களே வீடியோவாகப் பதிவு செய்து சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளனர். அரசு அலுவலகமான காவல் நிலையத்திற்குள் கணபதி ஹோமம் நடத்தப்பட்ட வீடியோ வெளியாகியுள்ள சம்பவம் தற்போது பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.