போதைப்பழக்கத்திற்கு எதிராக விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மகாராஷ்டிரா மாநிலம் சோலாப்பூரிலிருந்து கன்னியாகுமரி வரை 1,350 கி.மீ. தூரம் சைக்கிள் பயணம் மேற்கொண்டுள்ள 'வாரிபரிவார் சைக்கிள் கிளப்' குழுவினருக்குக் கோவில்பட்டியில் ரோட்டரி சங்கம் சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

மகாராஷ்டிரா மாநிலத்திலிருந்து கன்னியாகுமரி வரை செல்லும் போதைப்பழக்கத்திற்கு எதிரான விழிப்புணர்வு சைக்கிள் பேரணிக்குக் கோவில்பட்டியில் ரோட்டரி சங்கம் சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

போதைப்பழக்கத்திற்கு எதிராகப் பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில், மகாராஷ்டிரா மாநிலம் சோலாப்பூர் மாவட்டம் மங்கள்வேதா நகரத்திலிருந்து 'வாரிபரிவார் சைக்கிள் கிளப்' குழுவினர் சைக்கிள் பேரணி மேற்கொண்டுள்ளனர். டாக்டர் ராகுல் தலைமையில் 13 பேர் கொண்ட இக்குழுவினர் கடந்த நவம்பர் 12-ஆம் தேதி தங்களது பயணத்தைத் தொடங்கினர்.

11 நாட்களில் சுமார் 1,350 கிலோமீட்டர் தூரத்தைச் சைக்கிளிலேயே கடக்கும் இவர்கள், நாளை (நவம்பர் 22) கன்னியாகுமரியைச் சென்றடைந்து தங்களது விழிப்புணர்வுப் பயணத்தை நிறைவு செய்கின்றனர்.

இந்நிலையில், கோவில்பட்டிக்கு வருகை தந்த இந்தச் சைக்கிள் பயணக் குழுவினருக்குக் கோவில்பட்டி ரோட்டரி சங்கம் சார்பில் எஸ்.எஸ். துரைச்சாமி நாடார் மாரியம்மாள் கலை மற்றும் அறிவியல் கல்லூரி முன்பு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

கோவில்பட்டி ரோட்டரி சங்கத் தலைவர் முத்து முருகன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், ரோட்டரி சங்க நிர்வாகிகள் ராஜ்குமார், கண்ணன், நடராஜன், அருண், அரவிந்த் கண் மருத்துவமனை ரமேஷ், ரோட்டரி சங்க பப்ளிக் இமேஜ் சேர்மன் கண்ணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு சைக்கிள் பயணக் குழுவினரை வாழ்த்தி வரவேற்றனர்.