முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிரான வழக்கில், அரசு தரப்பு சிறப்பு வழக்கறிஞரை நியமிக்கும் விவகாரத்தில் குற்றம் சாட்டப்பட்ட நபர் தலையிட உரிமை இல்லை என்று தெரிவித்து உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்துள்ளது.

தமிழ்நாடு போக்குவரத்துத் துறையில் வேலை வாங்கித் தருவதாக எழுந்த ஊழல் புகார் வழக்குகளில், அரசு தரப்பு சிறப்பு வழக்கறிஞராக இருந்த பி. வாஷிங்டன் தனசேகரன் மாற்றப்பட்டு, வி. செந்தில் முருகன் நியமிக்கப்பட்டார். இந்த நியமனத்தை ரத்து செய்யக்கோரி மனுத் தாக்கல் செய்யக் குற்றம் சாட்டப்பட்ட செந்தில் பாலாஜிக்கு எந்த உரிமையும் இல்லை என்று தமிழ்நாடு அரசு தனது மனுவில் குறிப்பிட்டுள்ளது.

மாநில அரசைப் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையிலேயே அரசு தரப்பு சிறப்பு வழக்கறிஞர் நியமிக்கப்படுகிறாரே தவிர, குற்றம் சாட்டப்பட்டவருக்குப் பலன் அளிக்கும் வகையில் நியமிக்கப்படுவதில்லை. எனவே, வழக்கறிஞரை நியமிக்கும் விவகாரத்தில் குற்றம் சாட்டப்பட்ட நபருடன் கலந்தாலோசிக்க வேண்டிய அவசியம் இல்லை என்றும், அதற்கு அரசுக்கே முழு அதிகாரம் உள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், வி. செந்தில் முருகன் சிறப்பு வழக்கறிஞராக நியமிக்கப்பட்ட பிறகு, செந்தில் பாலாஜிக்கு எதிரான வழக்குகளில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் குறித்தும் இந்த பிரமாணப் பத்திரத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

முன்னதாக, இது தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி சூர்யகாந்த் தலைமையிலான அமர்வு முன் விசாரணைக்கு வந்தபோது, வழக்கின் அடுத்தகட்ட விசாரணையை வரும் செப்டம்பர் 23-ஆம் தேதிக்குத் தள்ளிவைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.