வுதி அரேபியாவில் நெடுஞ்சாலையில் அதிவேகமாகச் சென்று கொண்டிருந்த கார், ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், தமிழகத்தைச் சேர்ந்த 2 பெண் செவிலியர்கள் உட்பட 5 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

சவுதி அரேபியாவின் தாயிஃப் மாகாணத்தில் உள்ள அல் கபா மற்றும் அல் அவெய்ல் மருத்துவமனைகளில் செவிலியர்களாகப் பணிபுரிந்து வந்த பெண்கள், தங்களது விடுமுறை நாளில் பொருட்கள் வாங்குவதற்காகக் காரில் சென்றுள்ளனர். அப்போது கார் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இவ்விபத்தில் காரில் பயணித்த அனைவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். பலியானவர்களில் தமிழகத்தைச் சேர்ந்த விஜயலட்சுமி ஜெகதீஷ் (36), ஹெப்சிபா தேவமணி (33), கேரளாவைச் சேர்ந்த ஜெய்சிமோல் மேத்யூ (46), ஜோபினா ஜானி என்றும் காரை ஓட்டிச் சென்றவர் சவுதி அரேபிய நாட்டைச் சேர்ந்தவர் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.

உயிரிழந்த செவிலியர்களின் உடல்கள் தற்போது சவுதி அரேபியாவில் உள்ள உள்ளூர் மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளன. சவுதியில் உள்ள இந்தியத் தூதரக அலுவலகம், உயிரிழந்தவர்களின் உடல்களை விரைவாகத் தாயகம் கொண்டு வருவதற்கான அனைத்துச் சட்டப்பூர்வ மற்றும் தூதரக ரீதியிலான ஏற்பாடுகளையும் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர்.