இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: "தமிழ்நாடு சட்டப்பேரவையில் 110 விதியைப் பயன்படுத்தி அரசின் திட்டங்கள் பலவற்றைத் தமிழ்நாடு முதல்வர் விஜய் அறிவித்து வருவது மக்களாட்சிக்கும், அதனை நம்பி வாக்களித்த மக்களுக்கும் எதிரானதாகும்.

2026-27-ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்ட திட்டங்கள் குறித்து விவாதிக்கச் சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. ஆனால், 110 விதியின் கீழ் சிறப்பு அறிவிப்புகள் என்ற பெயரில், நிதிநிலை அறிக்கையில் இல்லாத புதிய திட்டங்களை ஒவ்வொரு நாளும் முதலமைச்சர் அறிவித்து வருவது ஏன்? எல்லாவற்றையும் 110 விதியின் கீழே அறிவிப்பீர்கள் என்றால் தனியாக நிதிநிலை அறிக்கை எதுக்கு? அதன் மீதான விவாதங்கள் தான் எதுக்கு?

பொது முக்கியத்துவம் வாய்ந்த அறிவிப்புகளுக்காகக் கடந்த திமுக, அதிமுக அரசுகள் விதி 110-ஐப் பயன்படுத்தின. அதை, மாற்றம் எனச் சொல்லி ஆட்சிக்கு வந்த தவெக அரசு விளம்பர வெற்று அறிவிப்புகளுக்குப் பயன்படுத்துவது மக்களுக்குச் செய்யும் துரோகமல்லவா? சட்டமன்ற உறுப்பினர்களின் விவாத வாய்ப்பைப் பறிப்பது கொடுங்கோன்மை அல்லவா?

கடந்த ஆகஸ்ட் 17-ஆம் தேதியிலிருந்து இன்று வரை தவெக அரசு விதி 110-ன் கீழ் அறிவித்த திட்டங்களின் மதிப்பு மட்டும் ஏறத்தாழ ரூ.73,900 கோடி. ஏற்கனவே இந்த ஆண்டு ரூ.1,76,000 கோடி கடன் வாங்குவதாக அறிவித்துள்ள நிலையில், புதிதாக அறிவிக்கப்பட்ட ரூ.73,900 கோடிக்கான நிதியை எப்படிப் பெறுவீர்கள்? யாரிடம் கடன் வாங்குவீர்கள்? இதுதான் கடன் சுமையைக் குறைக்கும் முறையா?

எனவே, மக்களாட்சிக்கு எதிரான, நிதி ஆதாரமில்லாத வெற்று விளம்பரத் திட்டங்களை 110 விதியின் கீழ் அறிவிப்பதை உடனடியாக நிறுத்திக்கொள்ள வேண்டும் என வலியுறுத்துகிறேன்." இவ்வாறு அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.