கடந்த 08.08.2022 அன்று புதுச்சேரி எழில் நகரில் வசித்து வரும் தனது சகோதரர் மரிய குளோத் வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று, மரிய குளோத் மற்றும் அவரது மனைவி கெரோலின் ஆகியோரைத் தாக்கியதாகத் தமிழக நிதி அமைச்சர் மரியவில்சன் மீது லாஸ்பேட்டை காவல் நிலையக் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்திருந்தனர்.
இவ்வழக்கு புதுச்சேரி முதலாவது குற்றவியல் நீதிமன்றத்தில் விசாரணையில் இருந்து வருகிறது. குற்றப்பத்திரிகையைப் பெற்றுக் கொள்வதற்காக ஆஜராக நீதிமன்றம் உத்தரவிட்டிருந்த போதிலும், அமைச்சர் மரியவில்சன் தொடர்ந்து ஆஜராகாமல் இருந்து வந்தார்.
இவ்வழக்கை விசாரித்து வந்த முதலாவது குற்றவியல் மாஜிஸ்திரேட்டு சேரலாதன் மாகிக்கு மாற்றப்பட்ட நிலையில், 2-வது குற்றவியல் நீதிமன்ற மாஜிஸ்திரேட்டு சந்திரசேகர் பொறுப்பு வகித்து வழக்கை விசாரித்து வந்தார். கடந்த ஆகஸ்ட் 31-ஆம் தேதி வழக்கு விசாரணைக்கு வந்தபோது அமைச்சர் ஆஜராகவில்லை.
தமிழகத்தில் சட்டசபை கூட்டத்தொடர் நடைபெறுவதால் நிதி அமைச்சரால் ஆஜராக முடியவில்லை என அவர் தரப்பு வழக்கறிஞர் தெரிவித்தார். இருப்பினும், உயர் நீதிமன்ற உத்தரவுப்படி வழக்கை விரைந்து விசாரிக்க வேண்டும் எனச் சகோதரர் தரப்பு வழக்கறிஞர் பிரவீன் வலியுறுத்தினார். இதனைத் தொடர்ந்து வழக்கு விசாரணையைச் செப்டம்பர் 4-ஆம் தேதிக்கு மாஜிஸ்திரேட் ஒத்திவைத்தார்.
நீதிமன்ற உத்தரவின்படி, சகோதரரைத் தாக்கிய வழக்கு தொடர்பான குற்றப்பத்திரிகையைப் பெற்றுக்கொள்வதற்காக அமைச்சர் மரியவில்சன் இன்று புதுச்சேரி குற்றவியல் நீதிமன்றத்தில் நேரில் ஆஜரானார். இச்சம்பவம் அரசியல் வட்டாரத்தில் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது.

