தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் வழங்குவதில் ரூ.100 கோடி லஞ்சம் பெற்றதாகத் தொடரப்பட்ட வழக்கின் அடிப்படையில், முன்னாள் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழியின் வீடு மற்றும் அலுவலகங்களில் மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் அதிரடிச் சோதனை நடத்தி வருகின்றனர்.

திமுக ஆட்சிக் காலத்தில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சராகப் பதவி வகித்த அன்பில் மகேஸ் மீது ஊழல் தடுப்புச் சட்டப் பிரிவுகளின் கீழ் மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

தனியார் பள்ளி நிர்வாகங்களுக்குப் புதிய அங்கீகாரம் வழங்குவது, தர உயர்வு அளிப்பது மற்றும் டி.டி.சி.பி. அனுமதி பெற்றுத் தருவது என பல்வேறு நடைமுறைகளுக்காகத் தனியார் பள்ளிகளிடம் இருந்து சுமார் ரூ.100 கோடி வரை லஞ்சமாக வசூலிக்கப்பட்டதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இவ்வழக்கில் தொடர்புடைய பி.டி. அரசகுமார் என்பவருக்குச் சொந்தமான இடங்களில் ஏற்கனவே நடத்தப்பட்ட சோதனையில், முக்கிய ஆவணங்கள் மற்றும் டிஜிட்டல் சான்றுகள் கைப்பற்றப்பட்டன. அதன் தொடர்ச்சியாக தற்போது, சென்னை மற்றும் திருச்சி உட்பட 6 இடங்களில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் தீவிரச் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதனிடையே, சென்னை தியாகராய நகரில் அமைந்துள்ள முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஸின் அலுவலகம் பூட்டப்பட்டிருந்ததால், கதவின் பூட்டை உடைத்து உள்ளே சென்று சோதனை நடத்த மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் முடிவு செய்துள்ளனர். முன்னாள் அமைச்சர் வீட்டில் நடைபெற்று வரும் இந்த அதிரடிச் சோதனை தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.