கர்நாடக மாநிலம் பெங்களூரு ராஜாஜிநகர் பகுதியில், சொந்தக் குடும்பத்தைச் சேர்ந்த 7 பேரை ஆட்டுக்கல்லால் தாக்கிப் படுகொலை செய்து, உடல்களைத் தமிழகத்தின் ஏற்காடு உள்ளிட்ட பல்வேறு வனப்பகுதிகளில் வீசிய கார் டிரைவர் இந்து சேகர் (52) மற்றும் அவருக்கு உதவியாக இருந்த அவரது 17 வயது மகள் ஆகியோரைப் போலீசார் கைது செய்துள்ளனர்.

இந்து சேகரின் மனைவி சுனிதா (40), மாமியார் ரூபவதி (65), மைத்துனர்கள் சங்கர் (44), சிவக்குமார் (30), சங்கரின் மனைவி நளினி (29), சிவக்குமாரின் மனைவி திவ்யா (30) மற்றும் சிவக்குமாரின் 7 வயது மகன் புனித் ஆகிய 7 பேர் கொடூரமாகக் கொல்லப்பட்டனர்.

சங்கர் மற்றும் நளினி குடும்பத்தினர் திடீரென மாயமானதைத் தொடர்ந்து, நளினியின் தாய் துங்கம்மா ஸ்ரீராமபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். விசாரணையில், சங்கரின் செல்போன் கடைசியாக இந்து சேகரின் வீட்டில் இருந்ததைக் கண்டறிந்த போலீசார், அல்சூர் பகுதியில் காரில் சுற்றிய இந்து சேகர், அவரது 17 வயது மகள் மற்றும் சிறுவன் யதீன் (10) ஆகியோரைப் பிடித்து விசாரித்தனர். அப்போது இந்த நெஞ்சை உலுக்கும் படுகொலை சம்பவம் வெளிச்சத்திற்கு வந்தது.

கடந்த அக்டோபர் 16 முதல் 31-ஆம் தேதிக்குள் இந்த 7 கொலைகளையும் இந்து சேகர் அரங்கேற்றியுள்ளார். முதலில் மனைவியையும், பின்னர் மாமியாரையும் கொன்றவர், அடுத்து விருந்துக்கு அழைப்பது போல மற்ற உறவினர்களை வீட்டிற்கு வரவழைத்து ஆட்டுக்கல்லால் அடித்துக் கொன்றுள்ளார்.

கொலையானவர்களின் உடல்களைப் பெங்களூரு நந்திமலை, தமிழ்நாடு சேலம் அருகே உள்ள ஏற்காடு வனப்பகுதி மற்றும் ஹாசனின் சிராடிகாட் வனப்பகுதிகளில் காரில் எடுத்துச் சென்று வீசியுள்ளார். இதில் சிறுவன் புனித்தின் உடல் மட்டுமே நந்திமலையில் மீட்கப்பட்டுள்ளது. மற்ற 6 பேரின் உடல்களைத் தேடும் பணியில் தனிப்படை போலீசார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

மாமியார் ரூபவதிக்கு ஸ்ரீராமபுரத்தில் உள்ள ரூ. 3 கோடி மதிப்பிலான வீடு தொடர்பான சொத்து பிரச்சினை மற்றும் மனைவியின் நடத்தை மீதான சந்தேகத்தால் எழுந்த குடும்பத் தகராறே இக்கொலைகளுக்குக் காரணம் எனத் தெரிகிறது. தந்தையின் மூளைச்சலவையால் 17 வயது மகள் இக்கொலைகளுக்கு உடந்தையாக இருந்துள்ளார் எனப் பெங்களூரு போலீஸ் கமிஷனர் சீமந்த்குமார் சிங் தெரிவித்துள்ளார்.