'ராமாயணம்' திரைப்படத்தில் சீதையின் கதாபாத்திரத்தைச் சண்டையிடும் வீராங்கனையாகச் சித்தரித்திருப்பதற்கு மூத்த நடிகர் முகேஷ் கண்ணா கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
நிதேஷ் திவாரி இயக்கத்தில் ரன்பீர் கபூர் (ராமர்), சாய் பல்லவி (சீதை), யாஷ் (ராவணன்) ஆகியோர் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் 'ராமாயணம்' திரைப்படம் குறித்து பல்வேறு விவாதங்கள் எழுந்து வரும் நிலையில், மூத்த இந்தி நடிகரும் 'சக்திமான்' தொடர் மூலம் பிரபலமானவருமான முகேஷ் கண்ணா கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளார்.
படத்தில் சீதை கதாபாத்திரம் சண்டைக் காட்சிகளில் இடம்பெறும் போராளியாகச் சித்தரிக்கப்பட்டிருப்பதாக வெளியான தகவல்களுக்கு எதிர்ப்பு தெரிவித்துப் பேசிய முகேஷ் கண்ணா: "சீதா தேவியை ராணி லட்சுமிபாய் போல சண்டையிடும் வீராங்கனையாகக் காட்டுகிறீர்களா? இன்றைய கதாநாயகிகள் சிலர் ஆண்களைப் போல வலிமையானவர்களாகச் சித்தரிக்கப்படுகிறார்கள் என்பதற்காக, சீதையின் கதாபாத்திரத்தையும் அதுபோல மாற்ற வேண்டுமா? வால்மீகி எழுதிய ராமாயணத்தை நான் படித்திருக்கிறேன். அதில் சீதை எங்கும் சண்டையிட்டதாகக் குறிப்பிடப்படவில்லை. அவர் ஒரு போர்வீரர் கிடையாது. அப்படி இருந்திருந்தால் ராவணன் அவரைக் கடத்திச் சென்றபோதே எதிர்த்துப் போராடியிருக்க மாட்டாரா?" என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
முன்னதாக, இக்காலகட்ட சண்டைக் காட்சிகள் குறித்து விளக்கிய படத்தின் தயாரிப்பாளர் நமித் மல்ஹோத்ரா, அந்தக் காட்சிகள் வால்மீகி ராமாயணத்தை அடிப்படையாகக் கொண்டவை அல்ல என்றும், 'அத்புத ராமாயணம்' நூலை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டது என்றும் தெரிவித்திருந்தார்.
இருப்பினும், இதனை ஏற்க மறுத்த முகேஷ் கண்ணா, வால்மீகி ராமாயணத்தின் மூலக் கதையை விட்டுவிட்டுச் சொந்தக் கற்பனைக் கதைகளைப் படத்தில் திணிக்கக் கூடாது எனப் படக்குழுவை விமர்சித்துள்ளார். மேலும், தான் இன்னும் முழுப் படத்தையும் பார்க்கவில்லை என்றும், வெளியான விளம்பரக் காட்சிகள் மற்றும் ரசிகர்களின் கருத்துகளின் அடிப்படையிலேயே இந்த விமர்சனத்தை முன்வைப்பதாகவும் அவர் தெளிவுபடுத்தியுள்ளார்.

