தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பல்வேறு கிராமங்களில் நிறைவடைந்த அரசு திட்டப்பணிகளின் திறப்பு விழா நடைபெற்றது. இதில் விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் ஜி.வி. மார்க்கண்டேயன் கலந்து கொண்டு புதிய கட்டிடங்கள் மற்றும் வசதிகளை மக்களின் பயன்பாட்டிற்காகத் திறந்து வைத்தார்.

இடைச்சியூரணி, வாதலக்கரையில் புதிய நியாயவிலைக் கடை கட்டிடங்கள் காடல்குடியில் பயணியர் நிழற்குடை, ஊராட்சி மன்ற அலுவலகக் கட்டிடம் மற்றும் நியாயவிலைக் கடை, பி.ஜெகவீரபுரத்தில் புதிய பயணியர் நிழற்குடை திறக்கப்பட்டது.

இடைச்சியூரணி கிராமத்தில் நியாயவிலைக் கடை கட்டிடத்தைத் திறந்து வைக்க வந்த சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயனுக்கு, கிராம மக்கள் 'செந்தில் நகர் வேலனே வருக' என்ற முருகனின் ஆரத்திப் பாடலைப் பாடி, தமிழர்களின் பாரம்பரிய முறைப்படி ஆரத்தி எடுத்துச் சிறப்பான வரவேற்பு அளித்தனர்.

அதனைத் தொடர்ந்து, வாதலக்கரை கிராமத்தில் கழிவுநீர் கால்வாய் முறையாகத் தூர்வாரப்படாததால் மழைநீர் தேங்குவதாகக் கிராம மக்கள் எம்.எல்.ஏ.விடம் கோரிக்கை வைத்தனர். இதனையேற்று, கழிவுநீர் கால்வாயை உடனடியாகத் தூர்வாரும் பணிகளைத் துரிதப்படுத்த வேண்டும் என்று அங்கு இருந்த வட்டார வளர்ச்சி அலுவலர்களுக்குச் சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன் உத்தரவிட்டார்.

இந்நிகழ்வில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சசிகுமார், தனலட்சுமி, கூட்டுறவுச் சார்பதிவாளர் முருகலட்சுமி, பொறியாளர் ஆனந்தவேல், புதூர் கிழக்கு ஒன்றியச் செயலாளர் செல்வராஜ், விளாத்திகுளம் தெற்கு ஒன்றியச் செயலாளர் இம்மானுவேல், முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் சீதாலட்சுமி, ஒன்றியப் பிரதிநிதி சிவலிங்கம், கிளைச் செயலாளர்கள் ரவி (எ) சுப்பையா, முருகதிருமாள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.