தூத்துக்குடி மாநகரப் பகுதியில் தவெக அரசு பொறுப்பேற்ற பின்பு 17 மதுபானக் கடைகள் மூடப்பட்ட நிலையில், தற்போது மூடப்பட்ட கடைகள் தூத்துக்குடி அருகே உள்ள புறநகர்ப் பகுதிகளில் மீண்டும் திறக்கப்பட்டு வருகின்றன. இதற்கு அந்தப் பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதன் ஒரு பகுதியாக, தூத்துக்குடி - ராமேஸ்வரம் நெடுஞ்சாலையில் அமைந்துள்ள வெள்ளப்பட்டி மற்றும் துப்பாசிப்பட்டி கிராமங்களுக்கு இடையே அரசு மதுபானக் கடை இயங்கி வருவதுடன், அங்கு மதுபானக்கூடம் அமைக்கும் பணிகளும் நடைபெற்று வருகின்றன. இக்கடையை அகற்றக் கோரி துப்பாசிப்பட்டி மற்றும் வெள்ளப்பட்டி கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் மாவட்ட ஆட்சியரிடம் பலமுறை மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது.

இதைக் கண்டித்து இன்று துப்பாசிப்பட்டியைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் மற்றும் கிராம மக்கள் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இப்பகுதியில் இருந்துதான் ஏராளமான பள்ளி குழந்தைகள் பேருந்து ஏறுகின்றனர் மற்றும் பெண்கள் வேலைக்குச் செல்கின்றனர்; எனவே மதுபானக் கடை அமைக்கப்பட்டால் உரிய பாதுகாப்பு இல்லாத சூழல் ஏற்படும் மற்றும் கிராமத்தில் பல்வேறு பாதிப்புகள் உருவாகும் என அவர்கள் குற்றம் சாட்டினர். பொதுமக்களின் இப்போராட்டம் காரணமாக அப்பகுதியில் சுமார் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

கள்ளச்சந்தை விற்பனையாளர்கள் தப்பியோட்டம்:

இதனைத் தொடர்ந்து அங்கு வந்த காவல்துறையினர் பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். இதனையடுத்து பெண்கள் போராட்டத்தைக் கைவிட்டு கலைந்து செல்ல முயன்றனர். அப்போது, கடையின் பின்புறத்தில் காலை 11 மணியளவில் கள்ளச்சந்தையில் மது விற்பனை செய்யப்படுவதைக் கண்ட பொதுமக்கள், மீண்டும் ஆத்திரமடைந்து கடைக்குள் புகுந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அங்குப் பாதுகாப்புப் பணியில் இருந்த போலீசார் மற்றும் பெண்களைக் கண்டதும் மது விற்பனையாளர்கள் சிலர் அங்கிருந்து தப்பியோடினர். இதனையடுத்து போலீசார் பெண்களைச் சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர். "தவெக அரசு பொறுப்பேற்ற பின்பு மதுக்கடைகளை மூடுவோம் என்று கூறிவிட்டு, தற்போது புதிது புதிதாகக் கிராமப் பகுதி அருகே மதுக்கடைகளைத் திறப்பதாக அப்பகுதி பெண்கள் கடும் கண்டனத்தைத் தெரிவித்தனர்.